நன்றி குங்குமம் தோழி
சர்க்கரை நோய் என்பது நமக்குப் பழகிப்போன ஒரு விஷயம் போல இன்று வீட்டில் ஒருவருக்காவது இருக்கிறது. அதிலும், ஒருபடி மேலே போய் நம்மை அச்சுறுத்துவதுதான் கர்ப்பக் காலத்திலும் நீரிழிவுப் பிரச்னை என்பது. இதனை எப்படித் தவிர்ப்பது? தற்காத்துக்கொள்ள வழிகள் என்ன? வந்தால் என்ன செய்ய வேண்டும்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கே விடை காணலாம்.
கர்ப்ப கால நீரிழிவு நோய்…
இன்சுலின் எதிர்ப்புத் தன்மை தொடர்ந்து அதிகரிப்பதால் ஒரு கட்டத்தில் இரண்டாவது வகை (டைப் 2) நீரிழிவு நோய் உண்டாகிறது. இதனையே நாம் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். (முதல் வகை என்பது சிறு வயது முதலே நோய் இருப்பது. இன்சுலின் சுரப்பில் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுவது). இப்படியான இந்த இரண்டாம் வகை சர்க்கரை நோய் கர்ப்பக் காலத்தில் மட்டும் குறிப்பாக தோன்றுவதே ‘கர்ப்பகால நீரிழிவு நோய்’.
பெருவாரியான பெண்களுக்கு இந்த பத்து மாதக் காலத்தில் தோன்றி குழந்தை பிறந்த பின் தானே மறைந்துவிடும். சில பெண்களுக்கு முன்பிருந்தே இரண்டாம் வகை பாதிப்பு இருந்திருக்கும் என்பதால், கர்ப்பக் காலத்திலும் இருக்கும். குழந்தை பிறந்த பின்னும் தொடர்ச்சியாக இருக்கும். சிலருக்கோ முதல் குழந்தைக்கு இல்லாமல் இருந்து, அடுத்து வரும் கர்ப்பக் காலத்தில் தோன்றி மறையும்.
காரணங்கள்…
இதுதான் காரணம் என இதுவரை கண்டறியப்படவில்லை. மரபணு மாறுதல், குடும்ப வரலாறு போன்றவை முக்கியக் காரணிகளாக நம்பப்படுகிறது.
ஆபத்துக் காரணிகள்…
* முப்பது வயதைக் கடந்து கருத்தரிப்பது.
* முன்பே இன்சுலின் எதிர்ப்புத் தன்மை இருப்பது.
* முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் தோன்றியது.
* ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பது.
* தைராய்டு சுரப்பி பிரச்னைகள் இருப்பது.
* குடும்ப வரலாறு இருப்பது.
* பி.சி.ஓ.டி பிரச்னை இருந்திருந்தால்.
* அதிக உடற்பருமன் உள்ள பெண்கள்.
* ஆரம்ப கர்ப்பக் காலத்தில் தினசரி அளவில் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை உண்பது.
புள்ளிவிவர குறிப்புகள்…
* ஒவ்வொரு வருடமும் பதினைந்து சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் இந்த நீரிழிவு நோயின் விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, அதிக சர்க்கரை அளவினால் கடைசி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் சிக்குவது, கண் பார்வை கர்ப்பக் காலத்தில் தெரியாமல் போவது போன்றவற்றைச் சொல்லலாம்.
* பதினான்கு சதவிகிதம் கர்ப்பிணிகள் கர்ப்பக்கால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* கர்ப்பக்கால நீரிழிவு நோய் பிரச்னை உள்ள பெண்களில் கிட்டதட்ட ஐம்பது சதவிகிதத்தினருக்கு குழந்தை பிறந்த பின் இரண்டாம் வகை சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
* முப்பது வயதைக் கடந்து கருவுரும் பெண்களுக்கு (அதற்கு முன் வயதினரை விட) நாற்பது சதவிகிதம் இப்பிரச்னை வரும் வாய்ப்பு உள்ளது.
விளைவுகள்…
* தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாமல் அதீத சர்க்கரை அளவு இருந்தால், குறை மாதத்தில் கூட குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்து விடுவர்.
* குழந்தை பிறக்கும் குறிப்பிட்ட தேதியில்கூட அதாவது, பத்து மாதம் நிறைந்த பின்பும் அதிக சர்க்கரை அளவுகள் இருக்கிறது, கட்டுப்படுத்த முடியவில்லை எனில் அறுவை சிகிச்சைதான் தேர்ந்தெடுப்பர்.
* கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் உள்ளது என்றால், அவர்களுக்கு எதிர்காலத்தில் அந்நோய் வரும் வாய்ப்பு நூறு சதவிகிதம் இருக்கிறது.
* நீரிழிவு நோய் இருக்கும் கர்ப்பிணியின் குழந்தைக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
* கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோயினால் சில கர்ப்பிணி பெண்களுக்கு கண் பார்வை மங்கலாய் தெரிவது நிகழலாம். ஆனால், குழந்தை பிறந்த பின் இந்த பாதிப்பு சர்க்கரை அளவு இயல்பாய் வந்ததும் சரியாகிவிடும்.
* நீரிழிவு நோய் அதிக ரத்த அழுத்தத்தை கர்ப்ப காலத்தில் உண்டாக்கும் என்பதால், தாய்-சேய் இருவருக்கும் ஆபத்து உண்டாகும்.
* முதல் இரண்டு மாதத்தில் அதீத சர்க்கரை அளவு இருந்தால், கரு களையவும் வாய்ப்பு உள்ளது.
* அதிக சர்க்கரை அளவினால் ரத்த அழுத்தம் அதிகமாகி குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.
* சர்க்கரை நோய் இருக்கும் தாயின் குழந்தை உடல் எடை அதிகமாக இருக்கும் என்பதால், சுகப்பிரசவத்திற்கு மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
செய்ய வேண்டியவை…
* சர்க்கரை அளவு எந்த மாதத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், கருத்தரிக்கும் முன்பிருந்தே அதிக காய்கறிகள், முட்டை போன்ற புரதம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளல் வேண்டும்.
* ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் குறைந்தது இருபது நிமிடங்கள் நடக்க வேண்டும்.
* தினசரி குறைந்தது நாற்பத்தி ஐந்து நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
* இதையெல்லாம் தவிர்த்து மாதம் ஒரு முறை உடல் எடையை பார்ப்பது, மருத்துவர் அறிவுறுத்தும் நேரத்தில் சர்க்கரை அளவு பார்ப்பது, தினசரி சர்க்கரை நோய் மாத்திரை எடுத்துக்கொள்வது போன்ற அடிப்படை விஷயங்களை செய்துகொள்ளுதல் அவசியம்.
செய்யக் கூடாதவை…
* உணவு நேரத்தில் உணவினைத் தவிர்த்து நொறுக்குத் தீனி சாப்பிடுவது கூடாது.
* பழச்சாறு அறுந்துதலை தவிர்க்க வேண்டும்.
* அதிக அளவில் பழங்களை உண்ணக் கூடாது. கொய்யா மாதிரி இனிப்பு குறைவாக இருக்கும் பழங்களை உண்ணலாம்.
* சாப்பிட்டதும் உடனடியாகத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ கூடாது.
* ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் இடையில் இரண்டு மணி நேரமாவது குறைந்தது இடைவெளி அவசியம்.
கண்டறிவது எப்படி?
* முன்பே திட்டமிட்டு கர்ப்பத்தினை தொடங்கவிருக்கிறீர்கள் எனில், கருத்தரிக்கும் முன் ஒரு முறை ரத்த சர்க்கரை அளவினை மருத்துவர் பரிசோதனை செய்யச் சொல்வர்.
* கர்ப்பம் உறுதியானதும் உடனடியாக சர்க்கரை அளவினை சோதித்துப் பார்ப்பர்.
* பின் மாதம் ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என சோதனை செய்வர்.
* ஒருவேளை சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையெனில், மாதத்தில் இரண்டு முறை பரிசோதனை செய்வர்.
இவையெல்லாம் அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கும் பரிசோதனைகள்.
தீர்வுகள்…
* சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்தால் மருத்துவர்கள் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க மாத்திரை பரிந்துரைப்பர். இதனை சரிவர தொடர்ந்து உட்கொள்ளல் வேண்டும். சிலருக்கு இன்சுலின் ஊசியும் பரிந்துரைப்பர்.
* இயன்முறை மருத்துவர் ஒவ்வொரு கர்ப்பிணிக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகள் பரிந்துரை செய்வர். இதனை தொடர்ந்து செய்து வருதல் அவசியம்.
* உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் இன்சுலின் சுரப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* சாப்பிட்டவுடன் நடக்க வேண்டும். அல்லது எளிய வேலைகளை செய்ய வேண்டும்.
அல்லது இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் பிரத்யேக உடற்பயிற்சிகள் செய்வது அதிக பலன் தரும். இந்த வகை அறிவுரைகளையும் இயன்முறை மருத்துவர் வழங்குவர்.எனவே அடுத்தத் தலைமுறையின் ஆரோக்கியம் நம் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு நாளையும் சிறந்த வாழ்வியலோடும், உடற் பயிற்சியோடும், மருத்துவ துணை கொண்டு செயல்படுவோம்.
இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்
The post கர்ப்ப கால சர்க்கரை நோய்…அறிவோம்! தெளிவோம்!! appeared first on Dinakaran.