- நரசிம்மா அவதாரம்
- வராஹா
- வரஹா அவதார் திருமால்
- ஹிரன்யகசிபு
- ஹிரன்யத்சன்
- இறைவன்
- நரசிம்மா
- தேவதாப் பிரஹலத்தன்
- ஹிரண்யகசிபு
- நாராயண பக்தி
- பிரம்ம தேவா
- தசவதரம்
- தர்ம
நரசிம்ம அவதாரம்
வராஹ அவதாரத்துக்குப் பின் நரசிம்ம அவதாரம் எடுத்தார் திருமால். ஹிரண்யாட்சன் என்ற அசுரனின் சகோதரனான ஹிரண்யகசிபுவை, பகவான் நரசிம்மமாய் தோன்றி அழித்தார். ஹிரண்யகசிபுவின் மகனான பக்தப் பிரஹலாதன், நாராயணபக்திக்கு ஆட்பட்டவனாய் இருந்தான். இது அசுரனுக்குப் பிடிக்கவில்லை. பிரம்மதேவனிடம், தானே தெய்வமாகப் போற்றப்பட வேண்டும் என்றும், பல்வேறு காரணங்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் வரம் வாங்கி வந்தவன். தன்னை யாராலும் அழிக்கமுடியாது என்ற கர்வத்துடன், நாராயண பக்தர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தான். தன் மகன் என்றும் பாராமல், பக்தப் பிரஹலாதனுக்குப் பல கஷ்டங்களைக் கொடுத்தான். அவனின் அனைத்துக் கொடுமைகளிலிருந்தும் நாராயணனால் காப்பாற்றப்பட்ட பிரஹலாதனை, ‘உன் நாரணன் எங்கிருக்கிறான்? நானே அவனை அழித்துவிடுகிறேன்’ என்று மிரட்டினான்.நாளை என்பது நரசிம்மத்துக்கு இல்லை என்று பிரஹலாதன் கூறியபடி, அசுரன் காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை அழித்தார் பகவான். நரசிம்ம அவதாரம் ஹிரண்யகசிபுவை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரம் அன்று. தன் பக்தனின் வார்த்தையை மெய்ப்பிக்க எடுத்த அவதாரம். அதனால்தான் ஆழ்வார்களும் நரசிம்மனை, ‘அங்கே அப்பொழுதே தோன்றிய அவதாரம்’ என்று போற்றுகின்றனர்.
நரசிம்ம அவதாரமாக பகவான் காட்சியளிக்கும் பல தலங்கள் நாடெங்கிலும் அமைந்துள்ளன. அஹோபிலம், சோளிங்கர், சிங்கப்பெருமாள் கோயில், நரசிங்கம்பேட்டை, கீழப்பாவூர், சிம்மாசலம், மங்களகிரி, மட்டப்பள்ளி, வாடபள்ளி என்று எழுதிக்கொண்டே போகலாம். நரசிம்மனின் வடிவங்களிலும் பல நிலைகள் உண்டு. யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்று பல நிலைகள். அதேபோன்று 2, 4, 6, 8, 16 கரங்களுடன் கூடியதும் ஹிரண்யகசிபுவைத் தன் மடியில் வைத்து சம்ஹாரம் செய்யும் நிலையிலும் சில வடிவங்களைப் பல திருத் தலங்களில் தரிசிக்கலாம்.சயன நரசிம்மரைப் பற்றி அறிந்தது உண்டா? பண்ருட்டி அருகில், திருவதிகை சர நாராயணப்பெருமாள் சந்நதியில் சயன நரசிம்மரைத் தரிசிக்கலாம். வராஹமும் நரசிம்மமும் இணைந்த வராஹ நரசிம்மத்தை அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் (ஆந்திரா) தரிசிக்கலாம். அதேபோன்று சுதர்சன நரசிம்மரைப் பல தலங்களில் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோகநிலையில் நான்கு திருக்கரங்களிலும் சக்கரத்துடன் தரிசிக்கலாம்.
நரசிம்மத்தை,
‘`உன்னைச் சிந்தை செய்து
உன் நெடுமா மொழியிசைப் பாடியாடி
என் முன்னைத் தீவினைகள்
முழுவேறறிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
என் முன்னைக் கோளரியே
முடியாததென்ன என் எனக்கே’’
– என்று வேண்டியபடி, அடுத்த அவதாரமான வாமனன் பற்றி அறிவோமா?
வாமன அவதாரம்
திருமறைக்காடு என்ற சிவத்தலத்தில், மூலவர் சன்னதியில் ஓர் விளக்கு அணையும் தறுவாயில் இருந்தது. தற்செயலாக அவ்வழி சென்ற எலியின் அதிர்வால் விளக்கின் திரி தூண்டப்பட்டு, விளக்கு நன்றாகச் சுடர்விட ஆரம்பித்தது. இதனால் மகிழ்ந்து போன சிவபெருமான், அந்த எலிக்கு மறுபிறவியை, பக்தப் பிரஹலாதனின் பேரனாக அமையும்படியான பாக்கியத்தை அளித்தார். அந்த எலியே மகாபலி சக்ரவர்த்தியாகப் புகழப்பெற்றார். இருந்தாலும் அந்த மகாபலிக்குச் சற்று கர்வம் ஏற்பட்டதால், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அகர குருவான சுக்கிராச்சாரியார், அவனுக்குக் குருவாக அமைந்துவிட்டார். மகாபலிக்கு சுக்ரதசை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தேவலோகத்தையே சூன்யமாக்கக்கூடிய சாமர்த்தியம் மகாபலிக்கு.தேவர்கள் சார்பில் அதிதி, பகவானிடம் வேண்டினாள். பகவானே அவளுக்கு மகனாகப் பிறந்தார். இவனை உபேந்திரன் என்று அழைத்தனர். குள்ளமாக இருந்ததால் வாமனன் என்ற செல்லப் பெயரும் பெற்றான். வாமனனே மகாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டு, பின் வானளாவிய வடிவெடுத்து அதிக உலகங்களையும் ஈரடியால் அளந்து, மூன்றாவதாக அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனைப் பாதாள லோகத்தில் அழுத்தினார். இது அநேகமாக அனைவரும் அறிந்த கதை.
பரந்தாமனின் பாத கமலங்கள் மகாபலியின் சிரசில் படவும், அவனுக்கு ஞானம் வந்துவிட்டது. அந்த நிலையில் அவனால் எம்பெருமானைத் தரிசிக்க இயலவில்லை. திருமாலிடம் தரிசனனும் வேண்டினான். பகவானும் மனம் மகிழ்ந்தது. அவன் இருக்கும் நிலையிலேயே ஐந்து தலை நாகமாகக் காட்சி கொடுத்தார். அவரே காஞ்சி உலகளந்தபெருமாள் சந்நதி அருகில் காட்சி அளிக்கும் ஊரகத்தான் ஆவார். வாமன அவதாரத்தின் (த்ரிவிக்ரம) அர்ச்சா திருமேனிகளைத் தமிழ்நாட்டில் மூன்று தலங்களில் காணலாம். காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நதி, திருக்கோயிலூரில் த்ரிவிக்ரமனாகவும், சீர்காழி என்று காழிச்சீராம விண்ணகரத்தில் தாடாளன் என்ற திருநாமத்துடனும் காட்சி அளிக்கிறான்.திருநீர்மலை திவ்ய தேசத்தில் நான்கு நிலைகளில், அதாவது நின்ற கோலத்தில் நீர் வண்ணனாகவும் அமர்ந்த கோலத்தில் சாந்த நரசிம்மராகவும், கிடந்த கோலத்தில் சயனத்தில் அரங்கனாகவும் காட்சி தரும் பெருமாளின் நடந்த கோல நிலை உலகளந்த அமைப்பில் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் ஓங்கி உலகளந்த உத்தமனாய் பிரமாண்டமாகக் காட்சி அளிப்பவர் சந்நிதி திருவெண்ணாழி பிராகாரத்தில் சுமார் 4அடி உயரத்தில் வாமன மூர்த்தியாக, கையில் குடை கமண்டலகத்துடன் காட்சி அளிப்பதை பலர் அறிந்திருக்க முடியாது. மேலும் அதேபோன்ற வாமன அமைப்பில் திருவரங்கத்தில் திருக்குறளப்பன் சன்னதியில் காணலாம்.கேரளதேசம் திருமாலின் தசாவதாரங்களில் 5வது, 6வது அவதாரங்களான வாமன, பரசுராம அவதாரங்களுடன் சம்பந்தப்பட்டது. கேரள பூமி, புராண காலத்திலிருந்தே பரசுராம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. கேரள ராஜ்யத்தை மகாபலி ஆண்டதாக மக்கள் கருதுகின்றனர். அதனால் ஓணம் பண்டிகை தினத்தன்று மகாபலி கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கும் பொருட்டே ஜாதிமத பேதமின்றி தங்கள் வீட்டு வாசலில் மலர்க்கோலம் போடுகிறார்கள். இவை விதவிதமான பூக்களாலே அமைக்கப்படுகின்றன.வாமன அவதாரத்தை அடுத்து திருமால் மூன்று ராம அவதாரங்களை எடுத்தார்.
பரசுராம அவதாரம்
பரசுராம அவதாரம் ஆவேச அவதாரமாகக் கருதப்படுகிறது. பரசுராமர் க்ஷத்திரியர்களைப் பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் போட்டவர், தசரதர் தன் மைந்தர்களுடன் மிதிலையில் சீதாராம கல்யாண வைபோகம் முடிந்து அயோத்தி செல்லும்போது பரசுராமர் எதிர்ப்பட்டார். இதைக் கண்டு பதறிய தசரதரை ராமபிரான் அமைதிப்படுத்தி, விளைவுகளை நான் சந்திக்கிறேன் என்று பரசுராமரை எதிர்கொண்டார். தேவ ரகசியப்படி ராமபாணம் பரசுராமர்மீது ராமனால் ஏவப்பட்டது. ராம பாணமானது (அம்பு) இலக்கை அழித்துவிட்டுத்தான் மீண்டும் ராமனிடமே திரும்பும். இதை அறிந்த பரசுராமர், தன் தவசீலங்களை ராம பாணத்துக்கு இலக்காகக் கொடுத்து ராமன் சொல்படி கேரள தேசத்துக்குச் சென்றுவிட்டார். கார்த்திகை கிருஷ்ண துவிதியை பரசுராமாவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிருகு வம்சத்தில் வந்த ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தவர் பரசுராமர் ராமன் என்ற பெயருடன் பதினான்கு வயதுக்குள்ளாக வேதங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இமயமலையில் தவம் செய்து சிவபெருமானிடம் பரசு (கோடரி) பெற்றவர் இவர். இவரின் மாணவனே கொடையாளி கர்ணன்.ஒரு சமயம் பரசுராமரின் தாய் ரேணுகாதேவி தண்ணீர் மொண்டு வருவதற்காக நீர் நிலைக்குச் சென்றார். அப்போது அந்த நீரினில் வானில் சென்றுகொண்டிருந்த ஒரு கந்தர்வராஜனின் நிழலைக் கண்டு இவ்வளவு அழகான கந்தர்வராஜன் யாரோ என்று மனதளவில் நினைத்தாள். தன் தவ வலிமையால் இதனையறிந்த ஜமதக்னி முனிவர் மிகுந்த கோபம் கொண்டு தாயைக் கொன்றுவிடுமாறு பணித்தார். தந்தையின் ஆணையை ஏற்று தாயையும் அவரைக் காக்க வந்த தன் சகோதரர்களையும் கொன்றார். அதே சமயம் தந்தையிடம் வேண்டி அந்தச் செயலுக்குத் தகுந்த பிராயசித்தம் கேட்டும் அதன்மூலம் தாய் மற்றும் சகோதரர்களின் உயிரை மீட்டார்.
ஜமதக்னி முனிவருடைய ஆச்ரமத்தில் இருந்த காமதேனு பசுவை அபகரிக்க கார்த்தவீர்யாஜுனன் என்ற வலிமை மிகுந்த அரசன் முயலுகையில் பரசுராமர் அவனிடம் போரிட்டுக் கொன்றார். இதனால் சினம்கொண்ட கார்த்தவீர்யாஜுனரின் புதல்வர்கள் (பரசுராமர் அறியாமல்) ஜமதக்னி முனிவரைக் கொன்றனர். ரேணுகாதேவியும் அடிபட்டாள். பரசுராமரிடம் இதைக் கூறிவிட்டு ரேணுகாதேவி உயிர் துறந்தாள். இதனால் பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்திரியர்கள் வம்சத்தை பூண்டோடு அழிப்பதாகச் சபதம் பூண்டு அதன்படி செயல்பட்டார். தனது சபதத்தை நிறைவேற்றி ஒரு யாகம் செய்து தனக்குக் கிடைத்த பூமியை காஷ்யப முனிவருக்குத் தானமாகக் கொடுத்தார். தானம் கொடுத்த பின் அந்த இடத்தில்தான் இருப்பது சரியல்ல என்ற எண்ணத்தில் மேற்குக் கடலுக்குச் சென்று தம் கோடரியைக் கடலுக்குள் வீசினார். அந்தக் கோடரி சென்ற தூரம் வரை கடல் பின்வாங்கி இடமளித்தது. அந்த இடத்தையே தன் வாஸஸ்தலமாகக் கொண்டார். அந்தப் பகுதியே தற்போதைய கேரள மாநிலம். அதனால் கேரள மாநிலமே பரசுராம க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது.அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணர், கிருபர் என்பவர்களோடு பரசுராமரும் சிரஞ்சீவி தன்மை பெற்றார். ஆனால் பரசுராமருக்கென்று தனியாக கோயில்கள் அமையவில்லை. சில தலங்களில் தசாவதார சந்நதியில் அவருக்கும் சிலா வடிவம் அமைந்திருக்கும். ஆனால், ரேணுகா தேவிக்குப் பல கோயில்கள் உள்ளன. குறிப்பாகச் சொன்னால் தமிழகத்தில் ஆரணியை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் மிகப் பிரசித்தி பெற்றவளாக அருள்பாலித்து வருகிறாள்.
(தொடரும்)
The post தர்மத்தை நிலைநாட்டும் தசாவதாரம் appeared first on Dinakaran.