சென்னை: 2023ல் மட்டுமல்லாது 2021ம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமவள சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையும் அதிமுக ஆதரித்துள்ளது. குறிப்பாக சட்டத்திருத்தம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக கூறிக்கொண்டே மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்ததும் அம்பலமாகியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு 2014ம் ஆண்டு பதவியேற்றது முதலே சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. முதன் முதலாக 2015ம் ஆண்டு கனிம வளங்களுக்கான ஒதுக்கீட்டில் ஏல முறையை கட்டாயமாக்கும் சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசினார். இதேபோல 2021ம் ஆண்டு கனிம வளங்களை குறித்த காலத்தில் மாநில அரசு ஏலம் விட தவறினால் அவற்றை ஒன்றிய அரசு ஏலம் விடும் வகையிலான சட்டத்திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அப்போது கனிம வளங்களின் மீதான மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதாக அதிமுக குற்றச்சாட்டினாலும் மசோதாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
இந்த வரிசையில் 2023ம் ஒன்றிய அரசு கொண்டு வந்த சுரங்கங்கள் மற்றும் கனிமங்களுக்கான சட்டத்திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது. சுரங்கங்களை ஒன்றிய தன்னிச்சையாக ஏலம் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தம்பிதுரை பேசியுள்ளார். இவ்வாறு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு வெவ்வேறு காலகட்டங்களில் கொண்டுவந்த சட்டத் திருத்தங்கள் அனைத்துக்கும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்களின் மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்துள்ளன.
The post 2021-லேயே கனிமவள சட்டத்திருத்தத்தை ஆதரித்த அதிமுக: மாநில அரசின் உரிமையை பறிப்பதாக கூறிக்கொண்டே ஆதரவு appeared first on Dinakaran.