×

இந்தியாவை வங்கதேசம் ஆக்கிரமிக்க முயன்றால் ‘லாலிபாப்’ சாப்பிட்டுக் கொண்டிருப்போமா? சட்டசபையில் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: இந்தியாவை வங்கதேசம் ஆக்கிரமிக்க முயன்றால் நாங்கள் ‘லாலிபாப்’ சாப்பிட்டுக் கொண்டிருப்போமா? என்று சட்டசபையில் முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றும் கூட ஒன்றிய வெளியுறவு செயலாளர், வங்கதேசம் சென்று அந்நாடு இடைக்கால தலைவர் யூனுசை சந்தித்து இந்தியாவின் கவலைகளை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் வங்கதேசத்தின் அண்டை மாநில மேற்குவங்கத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சட்டசபையில் ஆற்றிய உரையில், ‘நீங்கள் (வங்கதேசம்) எங்களது நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்தால், நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டு ‘லாலிபாப்’களை சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம். வங்கதேசத்தில் நடப்பது நல்லதல்ல; சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன.

கொல்கத்தாவைக் கைப்பற்றுவதாக வங்கதேசத்தில் இருந்து ஒருவர் (வங்கதேச தேசியவாதக் கட்சியின் இணைச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி) பேசியுள்ளார். மேற்குவங்கம், பீகார், ஒடிசாவைத் திரும்பப் பெறுவோம் என்றும் சிலர் அச்சுறுத்தியுள்ளனர். அவ்வாறு யாராவது கொல்கத்தாவை கைப்பற்ற வந்தால், மாநில அரசு அமைதியாக இருக்காது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; கலவரத்தை விரும்பவில்லை. இந்தியா ஒற்றுமையாக உள்ளது’ என்று காட்டமாக பேசினார்.

The post இந்தியாவை வங்கதேசம் ஆக்கிரமிக்க முயன்றால் ‘லாலிபாப்’ சாப்பிட்டுக் கொண்டிருப்போமா? சட்டசபையில் மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,India ,Mamta Banerjee ,Kolkata ,Mamta ,
× RELATED வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை...