*வாகனஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தேனி : தேனி நகர் புதிய பஸ்நிலையம் அருகே வால்கரட்டில் இருந்து மண்சரிவு ஏற்படும்போது விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.தேனி நகருக்கான பழைய பஸ்நிலையம் தேனி நகர் மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை சந்திப்பில் உள்ளது. தேனியில் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த பழைய பஸ் நிலையத்திலேயே அனைத்து வழித்தடங்களுக்கான பஸ்கள் வந்து சென்றன.
தேனி நகரானது மாவட்ட தலைநகராக உள்ளதால் மாவட்டத்திற்கான அனைத்து துறை அலுவலகங்களும் உள்ளன. மேலும், மாவட்ட தலைநகராக தேனி உருவான கடந்த 28 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் தேனிக்கு பெருநகரங்களில் உள்ளதைபோல பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், பெரியஅளவிலான கல்விக்கூடங்கள் என உருவாகி உள்ளது. இதனால் நாள்தோறும் தேனி நகருக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் தேதி நகரில் செயல்பட்டு வந்த பழைய பஸ்நிலையத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் கடந்த 2011ம் ஆண்டு அப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பெரியகுளம் செல்லக்கூடிய பை-பாஸ் சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுமார் 7.33 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்து, கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டினார். இப்புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இப்புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தேனி நகரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்று வரும் அனைத்து பஸ்களும் இப்புதிய பஸ் நிலையத்திற்கு வந்தே செல்கின்றன. இதனால் இப்புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பை-பாஸ் ரோட்டில் வால்கரட்டின் வழியாக சென்று வருகிறது. இப்புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக இப்புதிய பஸ்நிலையம் எதிரே வனத்துறைக்கு சொந்தமான வால்கரடு மிக உயராக இருந்தது.
இதனால் இச்சாலையும் மிக உயரமாக இருந்ததால் பயணிகள் பேருந்துகள் வந்து செல்ல சிரமம் இருக்கும் என்பதால் இச்சாலையில் மதுரை சாலையின் பிரிவு முதல் புதிய பஸ் நிலையம் வரையிலான சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு சுமார் 25 அடி வரை சாலை குறைக்கப்பட்டது. இதனால், சாலையின் ஓரத்தில் உள்ள வால்கரட்டின் ஓரம் செங்குத்தாக அமைந்துள்ளது.
செங்குத்தாக அமைந்துள்ள சாலையோரம் உள்ள வால்கரடானது பார்க்க அழகியதாக இருந்தாலும், மழைக்காலங்களில் வால்கரட்டின் மேல்பகுதியில் இருந்து மரக்கிளைகள், மண், பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மீதோ, நடந்து செல்லும் பாதசாரிகள் மீதோ மண்சரிவு காலங்களில் பாறைகள் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் செங்குத்தான வால்பாறையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் தேனி நகர் மதுரை சாலையில் ரயில்வே கேட் பிரிவு முதல் புதிய பஸ் நிலையம் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான பணிகள் துவங்கி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. ஆனால், சாலை துவங்கும் பகுதியில் பூஜ்ஜியம் அடியில் துவங்கி படிப்படியாக உயரத்தை கூட்டாமல் தடுப்புச் சுவர் துவங்கும் பகுதியில் இருந்து முடியும் வரை சுமார் 15 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
இதில் சாலையின் மையப்பகுதியில் வால்கரடு தடுப்புச்சுவருக்கு அருகில் சுவரின் உயரத்தை காட்டிலும் சுமார் 15 அடி உயரம் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது, வால்கரட்டில் இருந்து மழைக்காலங்களில் மண், பாறைகள் சரிந்து தடுப்புச்சுவரின் மீது விழுந்து, பாறைகள் சிதறி சாலையில் விழுந்து வருகிறது.
தற்போது தடுப்புச் சுவரின்மையப்பகுதியின் ஒருபகுதியில், மண்சரிவு ஏற்படும் பகுதியில் மிகப்பெரிய பாறை சரிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த பாறை சரிந்து விழுந்தால், அந்த சமயத்தில் இச்சாலையில் நடந்து செல்வோரோ, வாகனங்களில் செல்வோரோ விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
எனவே, விபத்து ஏற்படும் முன்பாக மாவட்ட கலெக்டர் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, மண்சரிவு காரணமாக கீழே சரிந்து விழும் வகையில் உள்ள பாறையை உடைத்து அப்புறப்படுத்தவும், தற்போதுள்ள தடுப்புச்சுவரின் உயரத்தை வால்கரடின் செங்குத்தான பகுதிக்கு இணையாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post தேனி நகர் புதிய பஸ்நிலையம் அருகே வால்கரடு தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் appeared first on Dinakaran.