சென்னை : நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கேள்வி பதில் நேரத்தின் போது, தமிழகம் முழுவதும் மாடுகள், நாய்கள் தொலையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர் என்றும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,”தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது; சென்னையில் உள்ளதைபோல் நாய்கள் இன கட்டுப்பாட்டு மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளோம். நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு மாநகராட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிராணிகள் வதை சட்டத்தில் நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மடுகளை பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர். மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல் அளித்துள்ளார். கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை என்று பேரவையில் சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “புதுக்கோட்டைமுழுமைக்கும் ரூ.1,900 கோடியில் குடிநீர் வழங்க திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம் மூலம் தங்கள் பங்கு நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார். மேலும் கோவை மாநகராட்சியில் சாலைகள் அமைக்க ரூ.300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்விக்கு நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டினால் எதிர்காலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படும் என்று துரை.சந்திரசேகர் பேசியதற்கு, “காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 248 இடங்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம். மாயனூர் பகுதியில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டியுள்ளோம். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம்,”இவ்வாறு கூறினார்.
The post மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு : அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.