- பெஞ்சல் புயல்
- யூனியன் கமிட்டி
- புதுச்சேரி
- யூனியன்
- விழுப்புரம்
- கடலூர்
- பென்ஜால்
- சென்னை
- யூனியன் அரசு
- தின மலர்
புதுச்சேரி: பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளை ஒன்றிய குழு 3 நாட்களாக ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து சேதங்கள் கணக்கெடுப்போடு நேற்று சென்னை திரும்பியது. இக்குழு ஒன்றிய அரசிடம் சேதங்கள் குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
பாதிப்பிலிருந்து மீட்க இடைக்கால நிவாரண தொகையாக ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி விடுவிக்க வேண்டும், இதனை பார்வையிட ஒன்றிய பல் துறை குழுவை அனுப்பி வைக்கவும் முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் வந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதல்வர், ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி ஒன்றிய குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயலால் பாதித்த 20 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் 2வது நாளாக கடலூர் மாவட்டத்திலும், பிற்பகலில் புதுச்சேரியிலும் ஆய்வு நடத்தினர். அப்போது டி.என்.பாளையம் பேட் உள்ளிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிய குழுவினனரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனையும், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து பேசினர்.
நேற்று முன்தினம் இரவு புதுவையில் தங்கிய ஒன்றிய குழுவினர், 2வது நாளாக நேற்றும் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். செட்டிப்பட்டு இருளர் காலனி அருகே புயல் காற்றால் மரம் விழுந்து சேதமடைந்த கம்பங்கள் மற்றும் டிராஸ்பார்மரை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தங்களது ஆடு, மாடுகள் அடித்து செல்லப்பட்டதாகவும் 10 ஹெக்டேர் நிலம் மழைநீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளது என்றும் வேதனையுடன் கூறினர்.
பிற்பகலில் இரு குழுவினரும் ஆய்வுகளை முடித்துவிட்டு ராஜீவ்காந்தி சதுக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தடைந்தது. அங்கு தலைமை செயலர் சரத் சவுகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாதிப்புகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் ஒன்றிய குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விளக்கி கூறினார். ஆய்வை முடித்துக்கொண்டு ஒன்றிய குழுவினர் சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஒன்றிய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை குறித்த ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இந்நிலையில் 10 நாள் விடுமுறைக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தொடர்கிறது.
The post பெஞ்சல் புயல் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஒன்றிய குழு ஆய்வு நிறைவு விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.