- தமிழ்நாடு அரசு
- Tiruppuvanam
- வனத்துறை?: பொது
- கால்நடை பராமரிப்பு துறை
- விலங்கியல் துறை வேளாண்மைத் துறை
- தின மலர்
திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் பன்றிகளால் விவசாயம் 10 வருடங்களாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பன்றிகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை, கால்நடை துறை, வேளாண்துறை விலங்கியல் துறை, அதிகாரிகள் ஒருங்கிணைந்த குழு மாவட்டம் முழுவதும் ஆய்வை தொடங்கியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
இதுதவிர கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயமும் பெருமளவில் நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய தாலுகாக்களில் கடந்த பத்து வருடத்திற்கு முன் பன்றிகள் நகர் புறத்தில் இருந்து துரத்தப்பட்டன. கண்மாய்களில் உள்ள சீமைக்கருவேலங் காடுகளில் பதுங்கி வாழத் தொடங்கின.
ஆரம்பத்தில் ஒரு சில பன்றிகள் இருந்த நிலையில், தற்போது பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 130 கண்மாய்களில் 90 சதவிகித கண்மாய்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.
நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயத்தை கடந்த பத்து வருடங்களாக பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்தாலும் அதில் மனிதர்களே சிக்கி உயிரிழப்பதும் நடந்து வருகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர்.
பன்றிகளின் தொல்லையால் விவசாய சாகுபடி பரப்பும் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தில் வனத்துறை, கால்நடைத் துறை, வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து திருப்புவனத்தில் ஆய்வை தொடங்கியுள்ளது. பன்றிகள் உள்ள கருவேல மர காடுகள், வழித்தடங்கள், சேதமடைந்த பயிர்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் இந்த குழு, அதன்பின் பன்றிகளை கட்டுப்படுத்துவது அல்லது அழிப்பது குறித்த முடிவை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க உள்ளனர். இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், கடந்த பத்து வருடங்களாக பன்றிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட எந்த விவசாயமும் செய்ய முடியவில்லை. பல கட்ட போராட்டத்திற்கு பின் பன்றிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். குழுவினர் ஆய்வை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது நெல் நடவு செய்துள்ள நிலையில், விளைச்சலுக்கு வரும்போது பன்றிகள் தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
The post பன்றிகளால் பயிர்கள் நாசம் தமிழக அரசு அமைத்த குழு வயலில் ஆய்வு appeared first on Dinakaran.