×

மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனே ரத்து செய்யவும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் தீர்மானத்தில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானத்தில்:
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கிய கனிமங்களை எடுக்கும் உரிமைகளை மாநில அரசின் அனுமதியின்றி ஒன்றிய அரசு ஏலம் விடகூடாது என்று கடந்த 03.10.2003 அன்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தும், எதிர்ப்பை கருத்தில் கொள்ளாது ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட பகுதியானது குடைவரை கோயில்கள், சமணச சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சப்பாண்டவர்கள் படுகைகள் போன்ற பல வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், இருப்பதை கருத்தில் கொண்டு இப்பகுதி ஒரு பல்லுயிர் பெருக்கு தளமாக கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நிலையிலும், சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டார்கள். இந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால் அப்பகுதிகள் இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இப்பகுதி மற்றும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்க்கு டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கனவே வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும் மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்ககூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

The post மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tungsten mine ,Madurai ,Stalin ,CHENNAI ,CHIEF STALIN ,EU ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு...