சிரியா: சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிரியாவில் சுமார் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்திவந்த அதிபர் அல் ஆசாத் கவிழ்க்கப்பட்டதை வரவேற்று சிரியா மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 2 வாரங்களாக சிரியாராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து முன்னேறிய கிளர்ச்சிப்படைகள் நேற்று முன்தினம் தலைநகர் டமாஸ்கஸை பிடித்த செய்தி காட்டு தீ போல் சிரியா முழுவதும் பரவியது. அரசு தொலைக்காட்சியை கைப்படுத்திய கிளர்ச்சியாளர்கள் அல் ஆசாத்தின் கொடுங்கோல் ஆழ்ச்சி வீழ்ந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வைத்தனர். அதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.
சிரியாவின் தேசிய கொடிகளை ஏந்திய படி பல்லாயிரம் பேர் வீதிகளில் நடனம் ஆடியபடி சென்றனர்.தலைநகர் டமாஸ்கசில் அதிபர் அல் ஆசாத்தின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பேனர்களை பொதுமக்கள் கிழித்தெறிந்தார். அல் ஆசாத் மற்றும் அவரது சர்வாதிகார தந்தை சிலைகளை சிரியா மக்கள் ஆவேசத்துடன் உடைத்து அப்புறப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் கிளர்ச்சி படையினரை பொதுமக்கள் வாழ்த்தி வரவேற்கும் காட்சிகளும் அரங்கேறின. சிரியா மட்டுமல்லாது அல் ஆசாத்துக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருந்த மக்களும் ஆங்காங்கே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிரீஸ் தலைநகர் ஏதேன், லெபனான் தலைநகர் பைரூட், ஜெர்மனி தலைநகர் பெர்லின், துருக்கி தலைநகர் அங்காரா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிரியா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சிரியாவில் சிறைச்சாலைகள் திறந்துவிடப்பட்டதால் அவற்றில் அடைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் பேர் பல ஆண்டுகளுக்கு பின்னர் கண்ணீருடன் வெளியே ஓடிவரும் வீடியோகள் வெளியிடப்பட்டுள்ளன. மறுபுறத்தில் அதிபர் அல் ஆசாத் உருவாக்கிய தடுப்பு மையங்கள் என்ற பெயரிலான வதைக்கும் கூடங்களிலிருந்தும் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தங்களின் நினைவாற்றலை முற்றாக இழந்து நிற்கும் பரிதாப காட்சிகள் காண்போரை குலைநடுங்க வைத்தன. சிரியாவில் விரைவில் இடைக்கால அரசு உருவாக்கப்படும் என்று கிளர்ச்சி குழுக்கள் அறிவித்துள்ளன. அல் ஆசாத்தின்புகழ்பாடும் தேசிய கொடிக்கு பதிலாக புதிய தேசியக்கொடியை கிளர்ச்சி படைகள் உருவாக்க உள்ளனர்.
மறு புறத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் தலைதூக்கி விட கூடாது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது அமெரிக்கா நேற்று வான் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஒன்றிய அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டாம்ஸ்கஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு வாழும் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.