வேலூர், டிச.9: திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்கு வேலூரில் இருந்து 200 போலீசார் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான உற்சவங்கள் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 13ம் தேதி மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். இத்திருவிழாவில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திருவிழாவுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநில போக்குவரத்துக்கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகின்றன. அதேபோல் தென்னக ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதனால் திருவண்ணாமலை நகரில் வேங்கிக்கால், செங்கம் சாலை உட்பட பல இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இச்சிறப்பு வாய்ந்த தீபத்திருவிழா பாதுகாப்புப்பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீசார் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 200 போலீசார் உள்ளடங்கிய 8 அணிகள் நேற்று காலை திருவண்ணாமலை புறப்பட்டு சென்றன. கூடுதல் போலீசார் மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகள் பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர் மாவட்டத்தில் இருந்து தீபவிழா பாதுகாப்புக்கு போலீசார் 200 பேர் திருவண்ணாமலை பயணம் appeared first on Dinakaran.