- ராஜ்ய சபா காங்கிரஸ்
- அபிஷேக் சிங்வி
- பாஜக
- அமாலி
- புது தில்லி
- ராஜ்ய சபா
- சபாநாயகர்
- ஜகதீப் தாங்கர்
- காங்கிரஸ்
புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் முடங்கியது. மாநிலங்களவை நேற்று தொடங்கியதும் அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் கூறுகையில்,’காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222ல் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று டிச. 5ல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள 100 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவைக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. எனவே தெரிவித்துள்ளேன். இந்த பணத்துக்கு யாராவது உரிமை கோருவார்கள் என காத்திருந்தேன்.
இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இவ்வளவு பெரிய தொகையை (ரூ. 50,000) மறப்பது நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறதா?. மேலும் இந்த நோட்டுகள் உண்மையான நோட்டுகளா அல்லது போலியானதா என்பதும் தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். ஜெகதீப் தன்கரின் இந்த அறிவிப்பை அடுத்து அபிஷேக் சிங்வியை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,’ இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்தால்தான் அது யாருடைய பணம் என்பது தெரிய வரும். விசாரணையை முடிக்காமல் அவைத் தலைவர் உறுப்பினரின் பெயரைக் கூறி இருக்கக்கூடாது’ என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தன்கர், ‘இது எனது கடமை. சபைக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
வழக்கமான நாசவேலை எதிர்ப்பு சோதனையின்போது இந்த பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது’என்று கூறினார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘பெயரை சொல்வதற்கு கார்கே ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்? இருக்கை எண் மற்றும் அதில் இருக்கும் உறுப்பினர் யார் என்பதை அவைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார், அதில் என்ன பிரச்சனை. அவைக்கு நோட்டு கட்டுக்களை எடுத்து வருவது ஏற்புடையதல்ல. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அவைத் தலைவர் தன்கரின் கருத்தை ஏற்கிறேன்’ என்றார். அவை முன்னவர் ஜேபி நட்டா கூறுகையில்,’ இந்த விவகாரம் தீவிரமானது, இது சபையின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்பதால் எதிர்க்கட்சி எம்பிக்களும், அரசு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் சில விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள், மற்ற விஷயங்களை மறைக்க விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்கே,’நாங்கள் இந்த விஷயத்தை அடக்க முயற்சிக்கிறோம் என்று ஏன் நட்டா கூறுகிறார். மறைக்கும் வேலையை செய்வது நீங்கள்தான். நாங்கள் ஒரு போதும் அதைச் செய்ய மாட்டோம்’ என்றார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலும்,’ இது ஒரு தீவிரமான பிரச்சினை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பக்கத்தில் வேறு என்ன கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. போலியான கதைகளால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டனர். இதிலும் சதி உள்ளதா? போலிக் கதையை முன்வைக்க என்ன வகையான கொடுக்கல் வாங்கல் நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் யோசிக்க வேண்டியது வரும்’ என்றார். இருதரப்பிலும் காரசார விவாதம் நடந்ததால் அவையில் அமளி நீடித்தது. இதை தொடர்ந்து அவை முதலில் 12 மணி வரையும், அதை தொடர்ந்து திங்கட்கிழமை வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
இருக்கையில் ஆள் இல்லாவிட்டால் கஞ்சா செடி கூட வளர்த்து விடுவார்கள்: அபிஷேக் சிங்வி அதிர்ச்சி
500 ரூபாய் நோட்டு கட்டு சிக்கிய விவகாரம் குறித்து அபிஷேக் சிங்வி எம்பி கூறும்போது,’ இப்போதுதான் முதன்முறையாக இதுபோன்று கேள்விப்படுகிறேன். இதற்கு முன்பு இதுவரை இப்படி கேள்விப்பட்டதே இல்லை. நான் அவைக்கு செல்லும்போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் 500 ரூபாய் கட்டு எனது இருக்கையில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன். அன்று நான் அவைக்கு மதியம் 12:57க்கு சென்றேன். அவை மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு நான் மதியம் 1.30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன்.
பின்னர் நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினேன். அவையில் நான் வெறும் மூன்று நிமிடம் மட்டுமே இருந்தேன். நாடாளுமன்ற கேண்டீனில் 30 நிமிடம் இருந்தேன். எந்த இருக்கையிலும், யாரும் எப்படியும் வந்து எங்கும் எதையும் வைக்கலாம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் இருக்கையுடன் கூடிய பூட்டு சாவி வேண்டும். எம்பிக்கள் இருக்கையில் இல்லாத நேரத்தில் அங்கு யாரும் கஞ்சா செடி வளர்ப்பதையும் அல்லது கரன்சி நோட்டுகளை வைத்துவிடுவதையும் தடுக்க ஒவ்வொரு இருக்கையைச் சுற்றிலும் கம்பி வேலி அல்லது கண்ணாடிக்கூண்டு அமைக்கப்பட வேண்டும்’ என்றார்.
மக்களவையும் நாள் முழுவதும் முடங்கியது
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரசுடன், காங்கிரஸ் கட்சியை இணைத்து பா.ஜ எம்பிக்கள் 2வது நாளாக நேற்றும் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் பதிலுக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி எம்பி தர்மேந்திர யாதவ் மற்றும் திரிணாமுல் எம்பி சவுகதா ராய் ஆகியோரும் குரல் கொடுத்தனர். இதனால் அவை கூடிய ஒரு நிமிடத்தில் மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகலில் சபை மீண்டும் கூடியபோது,மீண்டும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் கருப்பு முகமூடி அணிந்து எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
அதானி விவகாரத்தை மறைக்க முயற்சிக்கிறார்கள்
காங்கிரஸ் மக்களவை எம்பி இம்ரான் மசூத் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுகையில்,’ அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப ரூபாய் நோட்டுக்களைப் பற்றி பேசுகிறார்கள். இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்த வேண்டும். அபிஷேக் சிங்வி ஒரு சிறந்த வழக்கறிஞர். அவர் ஏன் இப்படி ஒரு சிறிய காரியத்தைச் செய்வார்’ என்று கேட்டார்.
இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?
மக்களவை பாஜ எம்பி மனோஜ் திவாரி கூறுகையில்,’ இது ஜனநாயகத்தின் கோயில். காங்கிரஸ் எம்பியின் இருக்கையில் இருந்து பணம் மீட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் இருக்கையில் இருந்தும், அவர்களது வீடுகளிலிருந்தும் பணத்தைக் கண்டறிகிறீர்கள். இவ்வளவு கருப்புப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என்றார்.
எம்பி பெயரை குறிப்பிட்டது தேவையற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பி.சந்தோஷ் குமார் கூறுகையில், ‘ரூபாய் நோட்டு பிடிபட்ட விவகாரத்தில் விசாரணையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அவை உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டது தேவையற்றது. இந்த பிரச்னை மாநிலங்களவை எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும்’ என்றார்.
The post மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி இருக்கையில் ரூ500 நோட்டு கட்டு சிக்கியது: பா.ஜ அமளி; அவை முடங்கியது appeared first on Dinakaran.