கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாஜ தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கோவை கொடிசியாவில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பர் ஏற்றுமதி செய்து வந்த நாடு இன்றைக்கு காப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆலை மூடப்பட்டதால் இந்தியா மேலைநாடுகளில் இருந்து காப்பர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு சர்வதேச அரசியலில் எந்த மாதிரியான பிரச்னை ஏற்படும் என்பதை சாதாரண மனிதர்கள் புரிந்து கொண்டால் ஸ்டெர்லைட் விவகாரத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது. இதேபோல், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும். மக்கள் வெளியேற்றப்படலாம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்பது சரியானது அல்ல. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை தடுக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். அண்ணாமலை பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தூத்துக்குடி, மதுரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மண்ணின் மைந்தர்களை சுட்டுக்கொல்ல காரணமான ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலையே, லண்டன் சென்றது வேதாந்தா நிறுவனத்துடன் பேரம் பேசத்தானா? இனி ஒருநாளும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை தூத்துக்குடி மண்ணில் கால் வைக்க விடமாட்டோம்.
மக்கள் விரோத கார்ப்பரேட் கைக்கூலி அண்ணாமலையே முடிந்தால் தூத்துக்குடிக்கு வந்து மேடை போட்டு பேசிப்பார். வீரம் செறிந்த மண் பாடம் புகட்டும் என்று கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பாஜ, அதிமுக ஆகிய கட்சிகள் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடுமையான கோபத்தில் உள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பாஜ மீது மக்களிடத்தில் வெறுப்பை அதிகரித்து உள்ளது.
இதேபோல், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து மதுரை மக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என்று தமிழக அரசு தந்த வாக்குறுதியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது பழி போட்டு ஒன்றிய அரசு தப்பிக்க முயலும் நிலையில், அண்ணாமலை டங்ஸ்டனுக்கு ஆதரவாக பேசி உள்ளதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
* 3 மாதத்துக்கு பின் மீண்டும் உருட்டல்
அண்ணாமலை பேட்டிளிக்கும் போதெல்லாம் அல்லது ஏதாவது விழாவில் பேசும்போதெல்லாம் புள்ளி விவரத்துடன் பேசுகின்றேன் என்ற போர்வையில் வாய்க்கு வந்தபடி அடித்து விடுவார். அவரது பேச்சை சுட்டிக்காட்டி ஆதாரத்துடன் நீங்கள் பேசியது பொய் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
தினமும் ஒரு பொய் சொல்லி அண்ணாமலை சிக்கி கொள்வார். ஆனால் கடந்த 3 மாதமாக அவர் லண்டனில் இருந்ததால் நெட்டிசன்கள் வருத்தத்தில் இருந்தனர். லண்டனில் இருந்து திரும்பிய மறுநாள் கோவை விழாவில் உளறி மாட்டி கொண்டு உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
The post நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை தடுக்க கூடாதாம்… ஸ்டெர்லைட், டங்ஸ்டனுக்கு அண்ணாமலை வக்காலத்து: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.