×

திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தனர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆதீன பெருமக்கள் இன்று (05.12.2024) மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேசுவர சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வெள்ளிரத வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், அருள்மிகு அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி திருக்கோயிலானது, பக்த மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயருக்கு “என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரம்” அருளியதும் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கியதுமான சிறப்புகளை கொண்ட திருத்தலமாகும். சமய குரவர்களில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோராலும் அபிராமி பட்டராலும் பாடல் பெற்ற அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ரூ.3 கோடி செலவில் 250 கிலோ வெள்ளியை கொண்டு உபயதாரர் கே.எஸ்.ஜெயராமன் அவர்களால் புதிய வெள்ளித்தேர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேசுவர சுவாமி திருக்கோயிலின் புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட 26 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மாநில வல்லுநர் குழுவால் 10,799 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குடமுழுக்கு நடைபெறும் 24 திருக்கோயில்களையும் சேர்த்து இதுவரை 2,342 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதனால் இந்த ஆட்சியை ஆன்மிக ஆட்சி என்று சொல்லாமல் வேறு எந்த ஆட்சி என்று சொல்ல முடியும். திருக்கோயில்களில் உள்ள 70 தங்க தேர்களும், 58 வெள்ளி தேர்களும் முழுமையாக பழுது நீக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திடும் வகையில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ரூ. 8 கோடி செலவில் பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு புதிள தங்கத்தேர் மற்றும் ரூ. 4 கோடி செலவில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் பணிகள் நிறைவுற்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திடும் வகையில் உலா வருகிறது. அதேபோல பலநூறு கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேர்களும், மரத்தேர் மராமத்து பணிகளும், திருத்தேர்களை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தருமபுரம் ஆதீனம் எங்களுக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். ஆதீனங்களின் மனம் சிறுதும் கோணாமல் நிச்சயமாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் தவத்திரு ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் தவத்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் தவத்திரு திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாசாரிய சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் தவத்திரு திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள், இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எம்.நிவேதா முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆப., மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ந.உமாமகேஸ்வரி, உயதாரர் கே.எஸ்.ஜெயராமன், மண்டல இணை ஆணையர் ச.சிவக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தனர்! appeared first on Dinakaran.

Tags : Grotto ,Thirukkadayur ,Arulmigu ,Amritkadeswarar Temple ,Minister ,Sekharbhabu ,Chief Minister ,Tamil ,Nadu ,K. ,Stalin ,Hindu ,P. K. Sekarbabu ,Adina Perujiya ,Amritkadeswara ,Swami Temple ,Mayiladuthura District ,Thirukkadaiur ,Arulmigu Amritkadeswara Swami Temple ,Arulmigu Amritkadeswarar Temple ,Sekarbhabu ,
× RELATED அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வெள்ளி ரதம்...