×

காலை 8 மணி வரை எதிரே வரும் வாகனம் தெரியாமல் கடும் மூடுபனி

திருவாரூர், டிச. 5: திருவாரூர் மாவட்டத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் நிலவும் கடும் மூடுபனியால், முகப்பு விளக்கை எரிய விட்டு பயணிகள் சென்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமானது அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் மழை பெய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் இந்த பருவமழை என்பது அக்டோபர் முதல் வாரத்திலேயே துவங்கி பெய்து வருகிறது. மேலும் இந்த பருவமழையானது துவக்கத்தில் சென்னையில் அதிகளவில் கனமழையாக பெய்த நிலையில் அதன் பின்னர் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழையாக பெய்தது. மேலும் வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு பெஞ்சல் என்று பெயரிட்டபட்டு இந்த புயலானது கடந்த மாதம் 30ம் தேதி பாண்டிச்சேரிக்கும் மாமல்லபுரத்திற்குமிடையே கரையை கடந்தது.

சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன்காரணமாக வெள்ளபெருக்கும் ஏற்பட்டது. மேலும் இந்த புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் கனமழை பெய்த நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதையடுத்து அங்கு வசித்த பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அதன்பின்னர் 28ம் தேதி முதல் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் ஓரளவு வெயில் அடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் துவங்கிய பனி பொழிவானது நேற்று காலை 8 மணி வரையில் கடும் மூடுபனி பொழிவாக இருந்ததன் காரணமாக திருவாரூர் நகர் உட்பட மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர். மேலும் திருவாரூர் நகரில் புகழ்பெற்ற தியாகராஜசுவாமி கோயில் மற்றும் கமலாலய தெப்ப குளம் மற்றும் சம்பா சாகுபடி வயல்கள் இந்த பனிபொழிவில் மூடப்பட்டு காணப்பட்டது குறிப்பிடதக்கது.

The post காலை 8 மணி வரை எதிரே வரும் வாகனம் தெரியாமல் கடும் மூடுபனி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மது போதையில் தகராறு நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை