திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 214 ஏரிகள் நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிக்கான வரத்துக் கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டு ஏரிகள் நிரம்பி வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் மொத்தம் 336 உள்ளன. அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும், 3296 சிறு குளம், குட்டைகளும் உள்ளன.
இந்நிலையில் பெஞ்சால் புயலால் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிக்கான கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டு ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அழிஞ்சிவாக்கம், கோவில்பதாகை, அரிக்கம்பேடு, பம்மதுகுளம், பெரியமுல்லைவாயல், சென்றாயம்பாக்கம், அலமாதி, வெள்ளானூர், கொப்பூர், வெள்ளேரிதாங்கல், தண்டுரை, லட்சுமிபுரம் உள்பட 56 பெரிய ஏரிகள் 100% நிரம்பியுள்ளது. இதில் 76 முதல் 99% வரையில் 57 ஏரிகளும், 51 முதல் 75% வரையில் 90 ஏரிகளும், 25 முதல் 50% வரையில் 115 ஏரிகளும், 25% வரையில் 18 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
அதேபோல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 158 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது. மேலும் 106 ஏரிகள் 75 சதவீதமும், 100 ஏரிகள் 50 சதவீதமும், 117 ஏரிகள் 25 சதவீதமும், 134 ஏரிகள் 20 சதவீதமும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 100 ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதேபோல், 540 குளம் குட்டைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 743 குளம், குட்டைகள் 75 சதவீதமும், 560 குளங்கள் 50 சதவீதமும், 787 குளங்கள் 25 சதவீதமும், 666 குளங்கள் 25 % வரையில் நீர் இருப்பு உள்ளது.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 214 ஏரிகள் நிரம்பியது appeared first on Dinakaran.