×
Saravana Stores

ஜெயங்கொண்டம் அருகே பைக் திருடர்கள் இருவர் கைது

ஜெயங்கொண்டம், டிச.2: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் இலையூர் திடீர்குப்பம் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக இரண்டு 2 சக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் தனித்தனி வாகனத்தில் திருவையாறு வழியாக அரியலூர் மாவட்டம் திருமானூர், அரியலூர் செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியே வந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர் ஏதாவது நோட்டமிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வாகனங்களை திருடி சென்று விற்று விட்டு ஜாலியாக சுற்றி திரிந்து வந்துள்ளனர். மேலும், 2 சக்கர வாகனங்களை பூட்டை உடைத்தும் சில வண்டிகளில் திருட்டு சாவி போட்டும் திருடியதாக கூறப்படுகிறது.

மேலும், விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருப்பந்துருத்தி அற்புத மாதா கோவில் தெருவை சேர்ந்த ராஜ் மகன் சுர்ஜித் (20), தஞ்சாவூர் மாவட்டம் திருவாலம்பொழில் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ஹரிஷ் என்கிற ஹரிஸ்வரன்(19) என்பதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நோட்டமிட்டு வாகனங்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு 2 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே பைக் திருடர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangondam ,Ariyalur District ,Jayangondam Police ,Sub-Inspector ,Nandakumar ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் நெடுஞ்சாலை துறை...