திருவனந்தபுரம்: மரபணு பிரச்சனையை கருவில் கண்டறிய கேரள அரசு மருத்துவர்கள் உட்பட 4 மருத்துவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அனீஸ் முகமது – சிருமை தம்பதியினருக்கு ஆலப்புழா அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி மரபணு குறைபாட்டுடன் குழந்தை பிறந்தது. கண்கள் மற்றும் காதுகள் முறையாக அமையாதது. பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடையாதது. கை, கால்களில் பாதிப்பு என பல்வேறு குறைபாடுகளுடன் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இப்பிரச்சனையை கருவிலேயே கண்டறிய தவறியதாக அரசு மருத்துவர்கள் 2பேர் உட்பட 4 மருத்துவர்கள் மீது ஆலப்புழா தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில் கருவுற்றது முதல் பிரசவம் வரை அதே அரசு மருத்துவனையில் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவர்களின் பரிந்துரைப்படி, இரண்டு தனியார் ஆய்வகங்களில் ஸ்கேன் எடுத்து அவற்றின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த 8ம் தேதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு மரபணு ரீதியான பாதிப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறைப்பாடுகளை எல்லாம் ஸ்கேன் முடிவுகளை வைத்து தெரிந்துகொள்ள முடியும் என்றாலும் அது குறித்து எந்த தகவலையும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சரியாக பரிசோதிக்காததே மரபணு குறைபாடுள்ள குழந்தை பிறக்க காரணம் என்றும், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனகுறைவாக இருந்தாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 125 மற்றும் 125B ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அரசு மருத்துவர்கள் இருவர் மற்றும் தனியார் மருத்துவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
ஆலப்புழா பெண்கள் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி பிரசவத்திற்காக சிருமை என்பவர் சேர்க்கப்பட்டதாகவும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை மையத்திற்கு இம்மாதம் 2ம் தேதி அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கு ஸ்கேன் செய்தபோது குழந்தைக்கு குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அது காலம் கடந்த செயல் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
The post கேரளாவில் மரபணு குறைபாட்டுடன் குழந்தை பிறந்த விவகாரம்: சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை! appeared first on Dinakaran.