தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயறு வகைகள், எள், பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியே முதன்மை தொழிலாக விளங்குகின்றன. அதன்படி, இந்த மாவட்டங்களில் அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிறுவனங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதையும் அரசு ஊக்குவிக்கிறது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ரூ1,070 கோடி திட்ட மதிப்பீட்டில் ‘வேளாண் தொழில் பெருவழித்தடம்’ அமைக்க தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. அதேபோல், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ‘பேம் டி.என்’ எனப்படும் நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. மேலும், வேளாண் பெருவழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
தற்போது, இந்த திட்டத்தை கண்காணிப்பதற்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண் தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் இத்திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல், தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறோம்.
ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் வேளாண் தொழில் வழித்தட திட்ட பணிகளை கண்காணிக்க ரூ1.68 கோடியில் 5 பேர் அடங்கிய கண்காணிப்பு பிரிவு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் தேர்வு பணி தொடங்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண் தொழில் வழித்தட திட்டம் முழுமையாக கண்காணிக்கப்படுவதுடன், அவற்றின் நிலை குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக வேளாண் வழித்தட பணிகளை 2027-28-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதன்படியும் செயலாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடன்
இத்திட்டத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது வசதி மையங்களும், புதிய தொழிற்பேட்டைகள், கிடங்குகளும் ரூ130 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், புதிதாக வேளாண் சார்ந்த உணவு தொழிற்சாலைகளை தொடங்குபவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்க தொகையாக மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது. மேலும், குளிர்ப்பதன கிடங்குகள், ஆலைகளில் இருந்து விரைவாக பொருட்களை எடுத்து செல்லும் வகையில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இளைஞர்கள்-பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்
வேளாண் தொழிலை நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலின் நலனை பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த வேளாண் வழித்தடம் திட்டம் மூலமாக விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன் டெல்டா பகுதியில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் உணவு தொழில் பூங்கா
வேளாண் தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களிலும் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளன. அதன்படி, ஏற்கனவே, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உணவு தொழில் பூங்கா அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உணவு தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது. இதில் தஞ்சைக்கு விரைவாக இடம் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளதால், விரைவில் இங்கு உணவு தொழில் பூங்காவை அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post டெல்டா மாவட்டங்களில் வேகமெடுக்கும் வேளாண் தொழில் வழித்தடப் பணிகள்: ஐந்து மாவட்டங்களில் ரூ1,070 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டம் appeared first on Dinakaran.