×
Saravana Stores

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை குற்றங்களே இல்லை என்பதுதான் சாதனை: 3,359 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வதுதான் சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்களான சைபர் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள காவலர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நேற்று நடைபெற்றது.

சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையினர் என்றால் யார் என்று அண்ணா சொன்னதை சொல்லி, உங்களை வரவேற்க விரும்புகிறேன். தங்களால் உருவாக்கப்படாத பிரச்னைகளுக்கு, தீர்வு காண வேண்டியவர்கள்! முரண்பாடு ஏற்படும் இடங்களில், முதல் ஆளாக நிற்க வேண்டியவர்கள்! எல்லா விதங்களிலும் சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டியவர்கள்! உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன், நடந்துகொள்ள வேண்டியவர்கள்! பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஏற்ப கடமையுணர்ச்சி மிக்கவர்களாக, இருக்க வேண்டியவர்கள்! இப்படி இன்ப, துன்பங்களை துறந்து, ஊண், உறக்கம் மறந்து, கடமை – கண்ணியம் – கட்டுப்பாடோடு பணியாற்ற வந்திருக்கக்கூடியவர்கள் தான் காவலர்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களை காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது. அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது.

அதன் அடையாளமாகதான் சமீபத்தில் ‘குடியரசு தலைவர் கொடி அங்கீகாரம், காவல் பதக்கம், 75வது ஆண்டு விடுதலை நாள் விழா பதக்கம், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து பணியாற்றுவது பொன்விழா கொண்டாட்ட பதக்கம் என்று வழங்கி, தமிழ்நாடு காவல்துறையில் செயல்படும் அனைவரையும் பாராட்டியிருக்கிறோம், ஊக்கப்படுத்தி இருக்கிறோம். இன்னும் சொல்லவேண்டும் என்றால், காவல்துறையை மேம்படுத்துவதற்காக காவலர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்துதரவும் முதன்முதலாக காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிகமான எண்ணிக்கையில் காவல் ஆணையங்களை அமைத்து, பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசுதான்.

இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. போலீஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல லட்சம் பேர்களில் இருந்து, நீங்கள் 3,359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, கஷ்டப்பட்டு வந்திருக்கும் நீங்கள் மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபட வேண்டும். புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும் உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்களான சைபர் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சமூக குற்றங்களை களைவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காத்துக் கொள்வதும் முக்கியம். உங்களுக்கு சமூகநீதி பார்வையும் மதச்சார்பின்மையும் நிச்சயம் முக்கியம். சாதி பாகுபாடு பார்க்க கூடாது. அனைவருக்கும் பொதுவான நிலையில் இருந்து நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களுக்கு சட்டம்தான் முக்கியம்.

பிரச்னை என்று உங்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். உங்களின் பேச்சும், நீங்கள் நடந்து கொள்வதிலும்தான், நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்க முடியும். உங்களுக்கு தெரியும், ஒரு மாநிலம் பாதுகாப்பானதாக இருந்தால்தான் தொழிற்சாலைகள் வரும். தொழில்கள் வந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். வேலைவாய்ப்பு கிடைத்தால்தான் தங்களின் தேவைகள் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். மக்களின் அந்த நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது.

அதைத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும், இங்கு வந்திருக்கும் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்படையும் செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்க வேண்டும். நிறைவாக, புதிதாக பணியில் சேரும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வதுதான் சாதனை. குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை; குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் நம்முடைய சாதனையாக இருக்க வேண்டும்.

காக்கிச் சட்டையை போடும் இன்றைக்கு அதற்கான உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பணியாற்றும் பகுதியில், குற்றங்கள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்பட்டது என்பதுதான், உங்கள் “டிராக் ரெக்கார்டு” ஆக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு குற்றச்சாட்டை சொல்வார்கள். வேலைக்கு வரும் புதிதில்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் சோர்ந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள். இன்றைக்கு பணியில் சேரும்போது உங்களிடம் இருக்கும் மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும், ஓய்வு பெறும் வரைக்கும் இருக்க வேண்டும். உங்கள் பேரை சொன்னாலே தமிழ்நாடே பெருமைப்பட வேண்டும்.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் ஒரு அறிவுரை தர விரும்புகிறேன். வேலையை கவனிக்கும் அதே நேரத்தில், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் தயவுசெய்து பார்த்துக் கொள்ளுங்கள்; குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுங்கள். நவீன காலகட்டத்திற்கு ஏற்றார்போல, தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, இன்றைக்கு பணி நியமன ஆணைகள் வாங்கும் நீங்கள், எதிர்காலத்தில் என்னிடம் அவார்டு வாங்க வேண்டும். அப்போது, இன்றைக்கு பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டதை நினைவுகூர்ந்து சொன்னீர்கள் என்றால், அதுதான் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் மற்றும் காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நீங்கள் பணியாற்றும் பகுதியில், குற்றங்கள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்பட்டது என்பதுதான், உங்கள் “டிராக் ரெக்கார்டு” ஆக இருக்க வேண்டும்.

* புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிகள்
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலியாக உள்ள இடங்கள் நிரப்பட்டு வருகின்றன. அதன்படி காவல்துறை, இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 2599 நபர்களும், (ஆண்கள் – 1819 மற்றும் பெண்கள் – 780), சிறைத்துறை காவலர் பணியிடத்திற்கு 86 நபர்களும், (ஆண்கள்-83 மற்றும் பெண்கள்-3), தீயணைப்பாளர் பணியிடத்திற்கு 674 நபர்கள் என மொத்தம் 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமனம் ஆணைகள் பெற்ற இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு வரும் 2ம் தேதியில் இருந்து திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு 4ம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

* 3 ஆண்டில் காவலர்களுக்கு செய்த திட்டங்கள்…
கடந்த 3 ஆண்டுகளில் காவலர்கள் முதல் டிஎஸ்பி வரை 17,435 நபர்களை காவல்துறையிலும், 1,252 பேரை தீயணைப்பு துறையிலும், 366 பேரை சிறைத்துறையிலும் புதிதாக நியமித்திருக்கிறோம். இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை, இடர்ப்படி ஆயிரம் ரூபாயாக உயர்வு, சென்னையை தலைமையிடமாக கொண்டு பணியாற்றும் மாநில நுண்ணறிவுப்பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, கடலோர காவல்படை, ரயில்வே காவல் படை, காவலர் பயிற்சி பள்ளி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகரங்களில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை மாதந்தோறும் உணவுப்படி, காவலர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கும் மருத்துவ பரிசோதனை, இரவு ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளுக்கு சிறப்பு படி, காப்பீட்டு தொகை இரண்டு மடங்காக உயர்வு, மன அழுத்தம் போக்க ‘மகிழ்ச்சி’ திட்டம், பெண் காவலர்கள் வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் சமநிலை பேண பயிற்சியளிக்கும் ‘ஆனந்தம்’ என்கின்ற திட்டம், காவலர் ஆளிநர்கள் மேல் நிலுவையில் இருந்த 2249 சிறு தண்டனைகள் ரத்து, இவைகள் எல்லாம் காவல்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னுடைய கவனத்திற்கு வந்த உடனே, அவர்களின் நலனுக்காக நம்முடைய அரசு செய்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.

* அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ்
இங்கே காவல்துறை உயர் அதிகாரிகள் வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, உங்களின் தகுதி மற்றும் சீனியாரிட்டி இதெல்லாம் பார்க்காமல், கடைநிலை காவலர்கள் வரை நண்பனாக இருக்க வேண்டும். ஒரு குடும்பமாக அன்போடும் அரவணைப்போடும் இருக்க வேண்டும். இவர்களுக்கு உங்கள் மேல் பயம் இருக்கக் கூடாது, மரியாதைதான் இருக்க வேண்டும்.

The post தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை குற்றங்களே இல்லை என்பதுதான் சாதனை: 3,359 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED கனமழை மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்...