×
Saravana Stores

செய் நன்றி மறவாத தேவன்

வீடுவீடாய் பொருட்களை விற்று கல்விபயிலும் அந்த ஏழைச் சிறுவனுக்கு பசி தாளவில்லை. ஏதேனும் ஒரு வீட்டில் உணவு கேட்க முடிவு செய்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது, திறந்தவளோ, ஒரு இளம் பெண். சிறுவனின் முகத்தில் களைப்பைக் கண்ட அவளோ, தண்ணீருக்குப் பதில் ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து சற்றே தெளிவடைந்தவன், ‘‘இந்த பாலுக்காக எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்?’’ என்று கேட்டான், அந்த சிறுவன். அவளோ ‘‘நான் பலனை எதிர்பார்த்து உதவி செய்வதில்லை, இது என் தாய் எனக்கு கற்றுக்கொடுத்தது’’ எனக்கூறி தனது தயவை காண்பித்தாள். காலங்கள் உருண்டோடியது, அந்தப் பெண் ஒரு அரிய வியாதியால் பாதிக்கப் பட்டாள். உள்ளூர் மருத்துவமனை முடியாது எனக் கைவிரித்தது. நகரத்தில் பெரிய மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாள். நகரத்தில் உள்ள அந்த மருத்துவமனை, அந்த அரிய வியாதிக்கு டாக்டர். ஹாவர்டு கெல்லி (haward Kelly) அவர்களுடைய ஆலோசனையை நாடியது. நோயாளி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட அவர், தனது மருந்துச் சீருடையை ஏற்று அந்த பெண்ணை காண விரைந்து வந்தார். பார்த்த கணத்தில் அவள் யார் என்பதை அறிய முடிந்தது. அவள் நோய்க்குத் தீர்வு காண தன்னாலான அனைத்து முயற்சிகளையும் சிறப்பாய் செய்து, இறுதியில் வெற்றியும் கண்டார்.

அந்த பெண்ணின் மருத்துவச் செலவிற்காக கட்டண விவரங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு வாங்கிய மருத்துவர் ஹாவர்டு கெல்லி, கட்டணத்தைச் செலுத்திய ரசீதை ஒரு கவரில் வைத்து அந்த பெண்ணின் அறைக்கு அனுப்பினார். அந்த பெண்ணிற்கு கவரை பிரிக்க மனம் இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் செலுத்தும் அளவிற்கு மிகப் பெரும் கட்டணமாக இருக்கும் என்பது அவளுக்கு தெரியும். பிரித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தது ‘‘கட்டணம் முழுவதும் செலுத்தப்பட்டது. நீங்கள் கொடுத்த ஒரு டம்ளர் பாலிற்கு என்றும் நன்றியுடன் டாக்டர். ஹாவர்டு கெல்லி. (Paid in full with one glass of milk).இறைமக்களே, ‘‘உன் ஆகாரத்தைத் தண்ணீர் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய்’’ (பிரக.11.1) என இறைவேதம் கூறுகிறது. ஏழைச் சிறுவனுக்கு இளம்பெண் கைமாறுக் கருதாமல் விதைத்ததை தன் முதிர்வயதில் அறுவடை செய்ததை நம்மால் உணர முடிகிறதா? ‘‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’’ (கலா.6:7). எனவே, ‘‘எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’’ (கொலோ.3:24).
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.

 

The post செய் நன்றி மறவாத தேவன் appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED "அந்த மனசு தான் சார் கடவுள்" - ...