×
Saravana Stores

கலைகளை அருளும் மதுவனேஸ்வரர்

நன்னிலம் என்பதற்கு நல்ல நிலம் என்பது பொதுவான பொருள். ஆனால், வேதாந்தமாக வேறொரு பொருளும் உண்டு. இத்தலத்திலேயே வாழ்ந்த தாண்டவராய சுவாமிகள், கைவல்ய நவநீதம் எனும் அத்வைத அனுபூதியைச் சொல்லும் பெரும் நூலை அருளினார். கைவல்யம் எனும் மாபெரும் நிலையை இந்த நிலத்தில் அமர்ந்து எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தார். அப்பேர்பட்ட நிலையை துரீய நிலை என்பார்கள். அந்த துரீய நிலையை உரைத்த பூமியாதலால் நல்ல நிலம் என்றானது. இதையே நன்னிலம் என்றழைக்கத் தொடங்கினர். ஈசனின் அளவற்ற கருணைக்கு ஓரறிவு, ஈரறிவு உயிரினங்கள், மானிடர்கள் என்று பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் தலம் நன்னிலம். ஒருமுறை விருத்திராசுரன் தேவலோகத்தில் தன் கைவரிசையைக் காட்டினான். அந்த அசுர ஆக்கிரமிப்பைக் கண்டு இந்திரன் அதிர்ந்துபோனான். சபையைக் கூட்டினான். ஆலோசனை கேட்டான். தேவர்களில் ஒருவர் யோசனை தெரிவித்தார்: ‘‘இந்திரரே, இம்முறை நாம் சீந்தராவணிக்கு செல்வோம். விருத்திராசுரன் இருளில் கூட நிழலை கண்டுபிடிப்பான். ஒன்று அவனால் சிறைப்பட வேண்டும்; இல்லையேல் தப்பித்து ஓடியபடி இருக்க வேண்டும். இனி நாம் தேவர்களாக இருக்க வேண்டாம். ஒளியுடல் உதறுவோம். சூட்சும ரூபத்தை சுருக்கிக் கொள்வோம். தேனீக்களாக மாறுவோம். தேனை உறிஞ்சி ஈசனை பூஜிப்போம். காற்றில் மிதந்து வேதங்களையே ரீங்காரிப்போம். ஈசனின் அருளிருந்தால் அசுரனை வதம் செய்வோம். இல்லையெனில், நிரந்தரமாக தேனீக்களாகவே வாழ்வோம்.’’அனைவரும் அந்த யோசனையை அப்போதே ஏற்றார்கள். கண நேரத்தில் ஒளியுடல் சுருங்க, தேனீக்களாக மாறினார்கள். பிறைச்சந்திர வடிவில் வானில் நின்றனர். தேவலோக நகரமான அமராவதியின் வாயிலிலிருந்து பூலோகத்தை நோக்கி ரீங்காரமிட்டபடி சீந்தராவணி எனும் திருநன்னிலம் நோக்கிப் பறந்தனர்.

லிங்க ரூபமாக வில்வ வனத்திற்கு மத்தியில் பேரரசனாக திகழ்ந்திருந்தார், ஈசன். பார்வை எட்டும் தொலைவு வரை மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன் வாசம் விண்ணுலகு வரை வீசியது. பூக்களுக்குள் குமிழ் குமிழாய் தேன் பளிங்குபோல் ஒளிந்திருந்தது. தேவ தேனீக்கள் வட்டமடித்து ஒவ்வொரு மலரின் இதழ்மீதும் அமர்ந்தன. விஸ்தாரமான சோலைகளில் புஷ்பம் மலரும் வரை காத்திருந்து தேனீக்கள் தேன் சேகரித்தன. சிறுவாயால் தேன் உறிஞ்சி அதன் மென்சூடு குறையும் முன்பு வில்வ வனத்தினுள் உறைந்திருக்கும் ஆதிசிவனை நோக்கிப் பறந்தனர். தேக்கிய தேனை அபிஷேகமாக ஈசனின் மீது சிந்தினர். ஈசனும் தேவ தேனீக்களின் வினோத பக்தி கண்டு வியந்தான். காலங்கள் உருண்டன. பெரிய தேனடைகள் தோன்றின. தைல தாரைபோல கண நேரம்கூட விடாது அபிஷேகத்தை தொடர்ந்தன, தேவ தேனீக்கள். நாளாவட்டத்தில் தனிமைத் தவமிருந்த தேவர்கள் நெஞ்சுரம் மிக்கவர்களாக மாறினர். தவத்தின் பயனாய் வரங்கள் குவிந்தன. தேவ தேனீக்களுக்கு இனியதொரு நாளில் ஈசன் காட்சி தந்தார். தன்னை அபிஷேகித்த தேனால் தான் பேரானந்தம் அடைந்ததை உணர்த்தினார். தேவர்கள் மீண்டும் தங்கள் பழைய உருவம் பெற்றனர். ‘மதுவனேஸ்வரா, மதுவனநாதா,’ என்று சிரசுக்கு மேல் கைக்கூப்பி வழிபட்டனர். வேதமந்திரங்களால் மதுவனத்தை நிறைத்தனர். நெஞ்சில் வீரத்தோடும், பலமேறிய புஜத்தோடும் தேவர்கள் விருத்திராசுரனோடு போரிட்டு, தெய்வத்தை துணை கொண்டதால் எளிதாக வெற்றி பெற்றனர்.

ஈசனின் சிருஷ்டிகளில் அவனை வழிபட ஈ, எறும்பு, தேனீ, பாம்பு என்று எல்லா ஜீவன்களுக்கும் உரிமையுண்டு என்று காட்டும் தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலைக் கட்டிய கோச்செங்கட்சோழன், முந்திய பிறவியில் சிலந்தியாக இருந்ததும், தேனீக்கள் பூஜித்த மதுவனேஸ்வரருக்கு அவன் ஆலயம் எடுத்ததும், பூச்சியினத்தின் பக்தி ஒற்றுமைக்குள் ஒளிரும் அற்புதம். ‘கட்டுமலைக் கோயில்’ தொழில் நுணுக்கத்திலேயே இந்த ஆலயமும் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது பதிகத்தில் இதை உறுதி செய்கிறார். பல யுகப் பெருமைகளும், சமயக் குரவர்கள் பாடிய பெருமையும் கொண்டது திருநன்னிலத்து ஆலயம்.கட்டுமலைக் கோயிலின் நேர்த்தியான கட்டமைப்பு மனதை ஈர்க்கும். படிகளின் மேலேறும்போதே வலப்பக்கத்தில் பிரம்மன் நிறுவி வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரை காணலாம். கருவறையை நெருங்கும்போதே அருட்தேன் அருவமாகப் பாய்வதை உணரலாம். யுகாந்திரங்களாக ஈசன் இங்கிருக்கிறார் எனும் தொன்மையே மனதை நெகிழ வைக்கிறது. அமுதத்திற்கு நிகரான, நிவேதனத்தில் சமர்ப்பிக்கப்படும் மதுபர்க்கம் எனும் தேனால் ஈசனை அபிஷேகம் செய்ததால் இவருக்கு மதுவனேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. தேனில் இனிப்பு தவிர வேறெந்த சுவையும் இருக்காது. அதுபோல மதுவனேஸ்வரர் நம் வாழ்வில் இன்பங்களை மட்டுமே அருள்வார். இவருக்கு தேனால் அபிஷேகம் செய்து, மலர் மாலை சூட்ட, வாழ்வு மணக்கும் என்பது உறுதி. மதுவனேஸ்வரர் எனும் திருநாமமிட்டுள்ளதால் மயங்கவைக்கும் சகல கலைகளுக்கும் அதிபதியாக இவர் விளங்குகிறார். இசையோ, ஓவியமோ, காவியமோ இயற்ற விரும்புவர்கள் இத்தல நாதரை கரைந்துருகி துதித்தால் போதும், கலைஞானம் ஓடோடி வந்து அரவணைத்துக் கொள்ளும்.

கருவறை திருச்சுற்றில் வலப்பக்கத்தில் சோமாஸ்கந்தர் தனி சந்நதியில் அழகாகக் காட்சி தருகிறார். நன்னிலத்து குமரப் பெருமான் நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கிய மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையோடு மகிழ்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வெளிப்பக்கச் சுவரின் தென்பகுதியில் நர்த்தன விநாயகர் ஆடும் நிலையை காணக் கண்கோடி வேண்டும். கருவறை கோஷ்டத்தில் குரு பகவானும், பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.தன் சந்நதியில் அம்பாள் அருளும், அழகும் ஒருங்கிணைந்த திருக்கோலம் காட்டுகிறாள். மதுவனநாயகி என்று அம்பிகையின் பெயரை உச்சரிக்கும்போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது. வலக் கரத்தில் மணிமாலையும், இடக்கரத்தில் தாமரையும், வரத-அபய ஹஸ்தங்களோடு காட்சி தருகிறாள். இத்தலத்தின் தீர்த்தத்திற்கு மது தீர்த்தம் என்று பெயர். நாராயண சுவாமிகள், தாண்டவராய சுவாமிகள் எனும் இரு மகான்களின் ஜீவ சமாதிகள்
இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன.கும்பகோணம் – திருவாரூர் பாதையில் கும்பகோணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

 

The post கலைகளை அருளும் மதுவனேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா?