×

ஸ்ரீவைகுண்டம் அருகே கடம்பாகுளத்தில் கரைகள் பராமரிப்பு பணி

*கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே கடம்பாகுளத்தில் கரைகள் பராமரிப்பு பணிகளை கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார். அப்போது பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பாசன விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய கடந்த 14ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார். இதையொட்டி அதற்கு முன்னதாக இரு வாரங்களுக்கு முன்னர் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தாலுகா வாரியாக நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அத்துடன் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வந்து சென்ற பின்னர் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து ஆய்வுக்குழுவினர் தெரிவித்த இடங்களில் கலெக்டர் இளம்பகவத் கள ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார்.

முதலில், அங்கமங்கலம், சுப்பிரமணியபுரம் பகுதியில் கள ஆய்வுக்கு பிறகு கடம்பாகுளத்தில் களஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி கடம்பா குளத்தில் பணி செய்யப்பட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது கடம்பாகுளத்தின் கரைகளில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதாக பாசன விவசாயிகள் விவசாய சங்க உழவர் பிரிவின் மாநில துணைத்தலைவர் தமிழ்மணி தலைமையில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குளம் மற்றும் குளத்துக்கரைகளையும் தனது செல்போனில் கலெக்டர் இளம்பகவத் வீடியோவாக பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அவர், மாவடிபண்ணை மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது பள்ளியின் சுற்றுப்புற சுவரானது பல்வேறு இடங்களில் உடைந்த நிலையில் காணப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுப்புற சுவர் கட்டுவதற்காக திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையில் சுற்றுப்புறச் சுவர் உடைந்தும் ஓராண்டு காலமாக எந்த பணிகளும் மேற்கொள்ளாத பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அதிகாரிகளை கலெக்டர் எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து, தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் இளம்பகவத் கள ஆய்வுசெய்தார். ஆய்வின்போது கோட்டாட்சியர் சுகுமாரன், ஏரல் தாசில்தார் செல்வகுமார், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

ஸ்ரீவைகுண்டம் அணையானது மணல்மேடுகளால் தூர்ந்து போனதால் தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை உருவானது. குறிப்பாக சிறியஅளவில் மழை பெய்தாலும் அதனால் பெருக்கெடுத்து தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரானது ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் கவலையடைந்த பாசன விவசாயிகள், ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் பாசன குளங்களை முறையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று வெளியானது. இதையடுத்து கலெக்டர் இளம்பகவத், சம்பந்தப்பட்ட கடம்பா குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக தூர்ந்துபோன மணல் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் ரத்தினசங்கர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே கடம்பாகுளத்தில் கரைகள் பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Kadambakulam ,Srivaikundam ,Yumbhagavath ,Yumabhagavath ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED நீர் சேமிக்கும் திறன் குறைவதால்...