×
Saravana Stores

தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி வாலிபரை கொன்று பாலிதீன் பையில் உடலை கட்டி கல்குவாரியில் வீச்சு: திருவக்கரையில் மீண்டும் பயங்கரம்


வானூர்: திருவக்கரையில் வாலிபரின் தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று பாலிதீன் பையில் சடலத்தை கட்டி கல்குவாரியில் வீசப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் நேற்று பாலிதீன் பையில் ஆண் சடலம் கிடப்பதாக வானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் சிவராசன் மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கல்குவாரியில் இருந்து சடலத்தை எடுப்பதற்காக வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலிதீன் பையில் சுற்றியபடி இருந்த சடலத்தை கல்குவாரிக்கு மேலே எடுத்து வந்து பிரித்தனர். அப்போது தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு தூர்நாற்றம் வீசிய நிலையில் ஆண் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த சடலத்தில் நெஞ்சு பகுதியில் கஸ்தூரி என்ற பெயர் மட்டும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருவக்கரை கிராம நிர்வாக அலுவலர் காரல் மார்க்ஸ் கொடுத்த புகாரின்பேரில் வானூர் போலீசார் ெகாலை வழக்குபதிவு செய்து, உடலை கைப்பற்றி புதுச்சேரி, கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சடலத்தை ஆய்வு செய்த போலீசார், சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரை ஒரு வாரத்திற்கு முன்பே யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து தலை, கை, கால்களை துண்டித்துவிட்டு சடலத்தை மட்டும் பாலிதீன் பையில் சுற்றி கட்டி கல்குவாரியில் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை அருகிலுள்ள பகுதிகளில் தேடி வரும் போலீசார், கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சடலம் கிடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் அப்பகுதிக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதுதவிர விழுப்புரம் மற்றும் அருகிலுள்ள புதுச்சேரி பகுதி காவல் நிலையங்களுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள போலீசார், அப்பகுதிகளில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதே கல்குவாரியில் பெண் ஒருவரின் உடல், சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது ஆண் உடலும் தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி வாலிபரை கொன்று பாலிதீன் பையில் உடலை கட்டி கல்குவாரியில் வீச்சு: திருவக்கரையில் மீண்டும் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Wanoor ,Thiruvashore ,Vilupuram District Vanur Taluga Thiruvakkara ,
× RELATED திருவக்கரை அருகே கல்குவாரி ெகாத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது