×

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது

மும்பை: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதே போல் ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு நவ.13 மற்றும் நவ.20ல் தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் பா.ஜ, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது.

முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தார். மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதியில் 30 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்த நிலையில் அங்கு நவ.20ம் தேதி மொத்தம் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களம் கண்டன. தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது. தொடக்கத்தில் மகாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் இரண்டுமே சரிசமமாக முன்னிலை வகித்தன. ஆனால் அதன் பிறகு, மகாயுதி கூட்டணி கை ஓங்கியது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்ததால், காலை 10 மணியளவிலேயே மகாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகிவிட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி 236 தொகுதிகளை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. பாஜ 133 தொகுதிகளையும், சிவசேனா 57 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளையும் கைப்பற்றின. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ மட்டும் 129 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மறுபுறம் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் மொத்தமாக 46 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. உத்தவ் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், சரத்பவார் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களை கைப்பற்றி உள்ளன.

மகாயுதியின் இந்த அமோக வெற்றியை கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன. மாநிலம் முழுவதும் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாயுதியின் வெற்றியால் டெல்லி பாஜ தலைமையும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் முன்னிலை விவரம் வெளியான உடனே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, துணை முதல்வர் பட்நவிசை செல்போன் வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல பிற பாஜ மூத்த தலைவர்களும், பாஜவின் ஹாட்ரிக் வெற்றியை பாராட்டி உள்ளனர்.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணியும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை ஆட்சியை கைப்பற்ற பாஜ கடுமையாக முயற்சித்தது. இதனால் கடும் இழுபறி இருக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டிருந்தன. இதற்கு ஏற்றார் போல் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்பத்தில் பாஜ கூட்டணி முன்னிலை பெற்றது. ஆனால் சிறிது நேரத்தில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது.

குறிப்பாக, 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களில் வென்று அசத்தியது. முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹித் தொகுதியில் 39,791 வாக்குகள் வித்தியாசத்திலும் அவரது மனைவி கல்பனா சோரன் கண்டே தொகுதியில் 17,142 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். ஹேமந்த் சோரனின் இளைய சகோதரர் பசந்த் சோரன் தும்கா தொகுதியில் 14,588 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதே போல, காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி 4 தொகுதிகளிலும், சிபிஐஎம்எல் 2 தொகுதியிலும் வென்றன.

இதன் மூலம், 57 இடங்களை கைப்பற்றிய ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. பல தடைகளை தாண்டி வெற்றியை ருசித்த ஜேஎம்எம் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கும் கொண்டாடி மகிழ்ந்தனர். பாஜ 68 தொகுதிகளில் போட்டியிட்டு 21 இடங்களில் மட்டுமே வென்றது. அதன் கூட்டணியில் ஏஜேஎஸ்யு, ஜேடியு, எல்ஜேபிஆர்வி, கட்சிகள் தலா ஒரு இடத்தில் வென்றன. ஜேஎம்எம் கட்சியிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்த ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் ஜம்தாரா தொகுதியில் காங்கிரசின் இர்பான் அன்சாரியிடம் 43,676 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் ஜேஎம்எம்மில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த சம்பாய் சோரன் சிராய்கெல்லா தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜேஎம்எம் தலைவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மகாராஷ்டிரா
மொத்த தொகுதி 288
பெரும்பான்மைக்கு தேவை 144
மகாயுதி கூட்டணி (வெற்றி 236)
பாஜ 133
சிவசேனா 57
தேசியவாத காங். 41
ஜேஎஸ்எஸ் 2
ஆர்எஸ்பிஎஸ் 1
ஆர்எஸ்விஏ 1
ஆர்ஒய்எஸ்பி 1
மகாவிகாஸ் அகாடி (வெற்றி 48)
உத்தவ் சிவசேனா 20
காங். 15
என்சிபிஎஸ்பி 10
சமாஜ்வாடி 2
சிபிஎம் 1
மற்றவை 4

ஜார்க்கண்ட்
மொத்த தொகுதி 81
பெரும்பான்மைக்கு தேவை 41
இந்தியா கூட்டணி (வெற்றி 56)
ஜேஎம்எம் 34
காங். 16
ஆர்ஜேடி 4
சிபிஐஎம்எல் 2
தேஜ கூட்டணி (வெற்றி 24)
பாஜ 21
ஏஜேஎஸ்யு 1
ஜேடியு 1
எல்ஜேபிஆர்வி 1

* மகாராஷ்டிரா மக்களின் பாசம் யாராலும் ஈடுசெய்ய முடியாதது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மேம்பாட்டுப் பணிகள்; சிறந்த நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றுபட்டு நாங்கள் மேலும் உயர்வோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்த மகாராஷ்டிராவின் சகோதர, சகோதரிகளுக்கும், குறிப்பாக இளைஞர்கள், பெண்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாசமும், அரவணைப்பும் யாராலும் ஈடுசெய்ய முடியாதது, எனத் தெரிவித்துள்ளார்.

* ஜனநாயக தேர்வில் தேர்ச்சி அடைந்தோம்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில், ‘‘ஜார்க்கண்டில் ஜனநாயக தேர்வில் நாங்கள் தேர்ச்சி அடைந்து விட்டோம். நமது சொந்த மாநிலத்தில் நமது சொந்த அரசை அமைத்து விட்டோம். இந்த சிறப்பான வெற்றிக்காக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். காங்கிரசின் ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில், ‘‘ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நீடிப்பார்’’ என்றார். இதே போல, பாஜவின் ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளரான அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறுகையில், ‘‘ஜார்க்கண்டில் பாஜவின் தோல்வி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வலியை தருகிறது. வெற்றிக்காக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முழு மூச்சாக பணியாற்றினோம். ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். சிறந்த வெற்றி பெற்ற ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.

* சரத்பவார் வியூகம் தோல்வி பாராமதி தொகுதியில் அஜித்பவார் வெற்றி: தம்பி மகனை தோற்கடித்தார்
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதி சரத்பவார் குடும்ப தொகுதி. மக்களவை தேர்தலில் அஜித்பவார் மனைவி சுனேத்ராவை, சரத்பவார் மகள் சுப்ரியா சுலே தோற்கடித்தார். சட்டப்பேரவை தேர்தலில் அஜித்பவாருக்கு எதிராக அவரது தம்பி ஸ்ரீனிவாசன் மகன் யுகேந்திரபவாரை களம் இறக்கினார் சரத்பவார். ஆனால் தேர்தல் முடிவில் அஜித்பவார் 1,81,132 வாக்குகள் பெற்று 1,00,899 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். யுகேந்திர பவாருக்கு 80,233 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் சரத்பவாருக்கு முதல் முதலாக பாராமதி தொகுதியில் தோல்வி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே: சிவசேனாவை உடைத்து பாஜவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வரான இவர், கோப்ரி பச்பகாடி தொகுதியில் போட்டியிட்டார். தனக்கு எதிராக போட்டியிட்ட உத்தவ் கட்சி வேட்பாளர் கேதார் திகேவை 1,20,717 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தேவேந்திர பட்நவிஸ்: பாஜ தலைவரும் துணை முதல்வருமான இவர், நாக்பூர் தென் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். தனக்கு எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 1,29,401 வாக்குகள் பெற்று, 39,710 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆதித்ய தாக்கரே: உத்தவ் தாக்கரேயின் மகனான இவர், வோர்லி தொகுதியில் போட்டியிட்டார். தனக்கு எதிராக களமிறங்கிய ஷிண்டே சிவசேனா வேட்பாளர் மிலிந்த் தேவ்ராவை 8,801 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

* காங்கிரசால் இனிமேல் தனித்து வெற்றி பெற முடியாது: மோடி
மகாராஷ்டிராவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பா.ஜ கூட்டணிக்கு வாழ்த்துக்கள். சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றினால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இந்த முடிவுகள் காட்டுகிறது. காங்கிரஸ் கூட்டணி சுயநல காரணங்களுக்காக கடைசி நிமிடத்தில் தைக்கப்பட்ட ஒன்று. காங்கிரஸ் மற்றும் அவர்களது நண்பர்களின் சதியை மகாராஷ்டிரா மக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். காங்கிரசால் இனி தனித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது. எப்போது தோற்றாலும், காங்கிரஸ் கட்சி மூழ்கும்போது மற்றவர்களை கீழே இழுக்கிறது. காங்கிரஸ் என்பது குடும்பத்தைப் பற்றியது. கட்சித் தொண்டர் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அந்தக் குடும்பம் எல்லாப் புகழையும் பெறும். பழைய காங்கிரஸைப் பார்த்த பல மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் இன்று அதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

* மகாராஷ்டிரா தோல்வி எதிர்பாராதது: ராகுல்காந்தி
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் நிலம், நீர், காடுகள் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய ஆணையை வழங்கிய ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்தியா கூட்டணியின் இந்த வெற்றி நிலம், நீர், காடு மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி. மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி எதிர்பாராதது. தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆய்வு செய்வோம். மாநிலத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி.

* கதவுகள் மூடப்பட்டு விட்டன: அமித் ஷா
ஜெய் மகாராஷ்டிரா, தேர்தலில் பா.ஜ கூட்டணிக்கு வரலாற்று வெற்றி தந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். சத்ரபதி சிவாஜி மகராஜ், பாபாசாகேப் அம்பேத்கர், ஜோதிபா பூலே மற்றும் வீர சாவர்க்கர் ஆகியோரின் புனித பூமியான மகாராஷ்டிரா எப்போதும் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியுடன் தேசத்தை உச்சத்தில் வைத்துள்ளது. மாயை, பொய்களுக்கு மத்தியில் மகாயுதி கூட்டணிக்கு இந்த மாபெரும் ஆணையை வழங்கியதன் மூலம் அரசிலமைப்பின் போலி நலம் விரும்பிகளின் கதவுகளை மக்கள் அடைத்து விட்டனர். மகாயுதி கூட்டணியின் வெற்றி ஒவ்வொரு மகாராஷ்டிராவாசியின் வெற்றி.

மோடி தலைமையிலான இரட்டை எஞ்சின் ஆட்சியின் செயல்திறனுக்கு கிடைத்த வெற்றி. ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் அதிக சதவீத வாக்குகளுடன் பாஜவை வெற்றி பெற வைத்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. இதற்கு காரணமாக மாநில பாஜ தொண்டர்களுக்கு வாழ்த்துகள். பழங்குடியின மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதும், அவர்களின் அடையாளத்தை பாதுகாப்பதும் பாஜவின் முக்கிய நோக்கம். ஜார்க்கண்ட் மக்களின் பழங்குடியின பாரம்பரியத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றிய அரசு உறுதிப்பூண்டுள்ளது. பாஜ சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும்.

* நம்பமுடியவில்லை உத்தவ் தாக்கரே அதிர்ச்சி
பாஜ கூட்டணி வெற்றி முற்றிலும் எதிர்பாராதது. புரிந்துகொள்ள முடியாத ஒரு அற்புதமான செயல்திறனை பா.ஜ வெளிப்படுத்தியது. இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. கொரோனா காலத்தில் என்னை தங்களின் குடும்பத் தலைவர் என்று கூறிய மகாராஷ்டிரா என்னை கைவிட்டதை நம்ப முடியவில்லை. இந்த தேர்தலில் அலையை விட சுனாமி ஏற்பட்டது என்பதை முடிவுகள் பிரதிபலிக்கின்றன. ஆனாலும் மகாராஷ்டிராவின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

The post மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : BAJA ALLIANCE ,AMOKA ,MAHARASHTRA ,CONGRESS ,JHARKHAND ,MUMBAI ,Jharkhand Legislatures ,Bajaj Alliance Amoka ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகராகிறார் ராகுல் நர்வேகர்