×
Saravana Stores

சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னை: சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை சென்னை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் செயின்ட் லூயிஸ் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 595 அனைத்து வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஒலிம்பிக் தீபம் ஏற்றி, கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டபந்தயம், நின்று நீளம் தாண்டுதல், உருளை கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல் மற்றும் தடை தாண்டி ஓடுதல் ஆகிய விளையாட்டு போட்டிகளில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 475 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தின விழா கலைநிகழ்ச்சிகளில் 11 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இந்த விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசு பொருட்களை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வழங்கினார். மேலும் திறன்பட பணியாற்றிய சிறப்பாசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். விழாவில் தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், கிண்டி வட்டாட்சியர் மணிமேகலை, செயின்ட் லூயிஸ் சிறப்பு பள்ளி தாளாளர் இன்னாசிராஜ், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர்கள், தலைமையாசிரியர்கள், மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District ,Collector ,South Chennai ,
× RELATED மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில்...