நெல்லிக்குப்பம், நவ. 21: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் மகன் சுரேந்தர்(21), கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மது போதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தர், தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு தற்போது அதிக அளவில் மது அருந்தியுள்ளாய். நான் பணம் தர மாட்டேன் என கூறி மகனை கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிலத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து சுரேந்தர் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விஷம் குடித்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.