×
Saravana Stores

ஓசூர் கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு: கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை

கிருஷ்ணகிரி: ஓசூரில் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கண்ணன் (30). வழக்கறிஞரான இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியர் வழக்கறிஞராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கம் போல பணிக்கு வந்தார். மதியம் ஒரு மணி அளவில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே நடந்து வந்த இவரை பின் தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (39) என்பவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை ஆனந்தகுமார் சரமாரியாக வெட்டினார். இதில் கண்ணனுக்கு தலை, முகம், கழுத்து உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. நடுரோட்டில் வழக்கறிஞரை மற்றொரு நபர் அரிவாளால் வெட்டுவதை கண்டு அந்த பகுதியில் இருந்த நபர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஆனந்தகுமார் அரிவாளுடன் நேராக ஓசூர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு சென்று நீதிபதி முன்பு சரண் அடைந்தார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வழக்கறிஞர் கண்ணனை பிற வழக்கறிஞர்கள் மீட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். அவர்கள் வழக்கறிஞர் சண்முகம் தலைமையில், தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் ஏ.எஸ்.பி. அனில் வாங்கரே விரைந்து வந்து வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வழக்கறிஞர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெட்டப்பட்ட வழக்கறிஞர் கண்ணன், ஆனந்தகுமாரின் மனைவியிடம் தவறாக பேசியும், அத்துமீறியும் நடந்து வந்ததும், அதை அவர் கண்டித்ததும், தொடர்ந்து அவ்வாறு கண்ணன் நடந்து கொண்டதால் ஆனந்தகுமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியதும் தெரிய வந்தது. ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஓசூர் கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு: கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Narayanan ,Hosur Lake Street ,Krishnagiri district ,Kannan ,Hosur Farmers Market ,Hosur Court ,Dinakaran ,
× RELATED யானைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை விளக்குகள்