×
Saravana Stores

13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகை; கேரளாவில் கால்பந்து போட்டி களமிறங்குகிறார் மெஸ்சி: விளையாட்டு அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 2025ல் நடத்தப்படும் கால்பந்து போட்டியில் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி பங்கறே்க உள்ளதாக, கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறியுள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக உள்ள சொற்ப மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. உலகின் எந்த மூலையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தாலும் தங்கள் வீட்டு டிவிக்களில் அவற்றை பார்த்து கரகோஷம் எழுப்பி மகிழ்வர், கேரள மக்கள்.

இந்நிலையில், கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் வரும் 2025ல் சர்வதேச கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்சியை உள்ளடக்கிய அர்ஜென்டினா நாட்டு அணியும் பங்கேற்க உள்ளது. இந்த விளையாட்டு முழுவதும், கேரள அரசின் கண்காணிப்பில் நடக்கும். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை, கேரள மாநிலத்தை சேர்ந்த வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை நடத்தும் வல்லமை கேரளாவுக்கு உண்டு என திடமாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன், கடந்த 2011ல், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வெனிசுலா நாட்டு அணிக்கு எதிராக நடந்த, சர்வதேச, நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்சி ஆடியுள்ளார். 13 ஆண்டுக்கு பின், 2025ல் நடக்கும் போட்டியில், இரண்டாவது முறையாக மெஸ்சி கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகை; கேரளாவில் கால்பந்து போட்டி களமிறங்குகிறார் மெஸ்சி: விளையாட்டு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Messi ,Kerala ,Sports Minister ,Thiruvananthapuram ,Abdurahiman ,Lionel Messi ,football ,Sports ,Dinakaran ,
× RELATED 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் மெஸ்ஸி