பெரம்பூர்: ஒரு காலகட்டத்தில் போதை பொருட்களை பயன்படுத்துபவர்களை குற்றம் செய்தவர்கள் எனக்கருதி அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். சாராயக் கடைகளும் கள்ளுக் கடைகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தன. குடிப்பவர்கள் ஊருக்கு வெளியே சென்று குடித்துவிட்டு பலருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு போதை என்ற ஒரு கலாச்சாரம் திரை மறைவில் இருந்தது. ஆனால் இன்று கல்யாணம் தொடங்கி கருமாதி வரை அனைத்திலும் போதை என்ற ஒன்று கலந்து விட்டது. எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற ஒரு கலாச்சாரம் இளைய தலைமுறையினரிடையே அதிகரிக்க தொடங்கி விட்டது.
முதலில் பீர், அதன் பிறகு சரக்கு என தொடங்கி, அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தற்போது அடுத்தடுத்த செயல்களில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்கின்றனர். எதை சாப்பிட்டால் வாசனை வராது, எதை சாப்பிட்டால் போலீசாரிடம் சிக்க மாட்டோம், எதை சாப்பிட்டால் அதிக நேரம் போதை இருக்கும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் போதை வஸ்துக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நல்ல விஷயங்களை தேடிச்சென்று கேட்டாலும் கிடைப்பதில்லை என்று கூறும் இதே நாட்டில், கெட்ட விஷயங்கள் நம்மை தேடி எளிதாக கிடைக்கின்றன. அந்த வகையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது மிக எளிதாக கிடைக்கின்றன. இதற்கு செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாடும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. எவ்வளவு பேரை தான் காவல்துறையினர் பாலோ செய்ய முடியும் என கேள்வி கேட்கும் அளவிற்கு தவறு செய்பவர்கள் எண்ணிக்கையும், போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பிட்ட இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகி ஒரு குறிப்பிட்ட அளவில் அதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதைத் தாண்டி வேறொரு உலகம் உள்ளது. பெரும்பாலும் மது, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் இந்த உலகத்திற்கு வருவதில்லை. ஒரு மனிதன் எவ்வளவுதான் குடித்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவனால் மதுவை குடிக்க முடியாது. கீழே விழுந்து விடுவான். இதே போலத்தான் கஞ்சாவும், ஓரளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் அவர்கள் தன்னை மறந்து மயக்க நிலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் சில போதைப் பொருட்களை தற்போது இளைய தலைமுறையினர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் போதையாவது கிடையாது, மாறாக எப்போதும் ஹேப்பி மூடு எனப்படும் சந்தோஷத்தில் மிதக்கின்றனர். இது ஒரு விதமான எனர்ஜி என அவர்களது பாஷையில் கூறுகின்றனர்.
அந்த வகையில் சமீப காலமாகவே குறிப்பிட்ட போதை பொருட்களை போலீசார் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆதிக்கம் மற்றும் பல்வேறு அபரிவிதமான வளர்ச்சியால் நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் மற்றும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து காவல்துறையினர்களுக்கு பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து குறிப்பிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விற்பவர்களை கைது செய்ய தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டு தற்போது அந்த பிரிவு மூலமாக பல விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அருண் மூலம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு சென்னையில் பல்வேறு போதைப் பொருட்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன. இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மெத்தபெட்டமைன், எம்டிஎம்ஏ போதை மாத்திரை, ஓஜி கஞ்சா, எல்எஸ்டி ஸ்டாம்ப் போன்ற போதைப் பொருட்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன. முன்பெல்லாம் குறிப்பிட்ட போதை பொருட்கள் பிடிபட்டால் அந்த நபர்களை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதன் பிறகு அந்த வழக்குகளைப் பற்றி பெரிதாக பின் தொடர மாட்டார்கள். காரணம் வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால் தற்போது ஒவ்வொரு போதை பொருட்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பதை முழுவதுமாக ஆராய்ந்து குறிப்பிட்ட அந்த நபர்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் போதை பொருட்கள் பிடிபடும்போது செயின் லிங்க் போன்று பல்வேறு நபர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொடுங்கையூரில் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 15 பேர் வரை போலீசார் கைது செய்தனர். இதேபோல கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த வழக்கிலும் அடுத்தடுத்து போலீசார் 8 பேரை கைது செய்தனர். இதில் கஞ்சா, ஓஜி கஞ்சா எனப்படும் உயர்ரக கஞ்சா உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அயனாவரம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மெத் எனப்படும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்தவர்களை அடுத்தடுத்து கைது செய்து வந்தனர். மேலும் கிரண்டர் எனப்படும் செயலியை பயன்படுத்தி மெத்தபெட்டமைன் வாங்கி விற்பனை செய்த நபர்களை பெங்களூருவில் வைத்து அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் கேம்ரான் நாட்டைச் சேர்ந்த ஜோன்தான் என்பவரை மிகவும் சிரமப்பட்டு பிடித்த போலீசார் அவர் மெத்தபெட்டமைன் தயாரித்து அதனை சென்னையில் விற்று வந்ததையும் கண்டுபிடித்தனர். இவ்வாறு போலீசாரின் அடுத்தடுத்த அதிரடியால் சென்னையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மதுபானம், கஞ்சா போன்ற பொருட்களை பதுக்கி விற்பனை செய்யும்போதும், அதனைக் கொண்டு செல்லும்போதும் எளிதில் சிக்கி விடுவார்கள். ஆனால் மெத்தபெட்டமைன், ஸ்டாம்ப் மாத்திரை போன்ற போதைப்பொருட்களை கொண்டு செல்வது மிகவும் எளிதாக உள்ளது. ஏதாவது ஒரு லக்கேஜில் வைத்து 100 கிராம் 200 கிராம் என கொண்டு செல்கின்றனர். அதனை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போதை பொருட்களை சர்வ சாதாரணமாக செல்கின்றனர். ஆனால் அதையும் நோட்டம் பிடித்து தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மது, கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் அல்லது மிகவும் வசதி படைத்தவர்கள் மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
பிரவுன் சுகர், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் மிகவும் விலை அதிகம் என்பதால் இதற்கு அடுத்தபடியாக உள்ள மெத்தபெட்டமைன், ஸ்டாம்ப் மற்றும் எம்டிஎம்ஏ எனும் போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களை தற்போது சிலர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள் சிலர் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் பயன்படுத்திய ஒரு ஐடி ஊழியரை கைது செய்தபோது அவர் கூறிய தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலும் இரவு பணியில் உள்ள ஐடி ஊழியர்கள் சிலர் மெத்தபெட்டமைனை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தாங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வேலை செய்வதற்கு எங்களுக்கு இது ஊக்க மருந்தாக பயன்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
₹3000 மதிப்புள்ள ஒரு கிராம் போதைப் பொருளை வாங்கி மூன்று பேர் அல்லது நான்கு பேர் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. பெரும்பாலும் ஐடி ஊழியர்கள் அதிகம் உள்ள பெங்களூரு பகுதியில் இந்த கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையிலும் இது அதிகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் இருந்து மெத் மற்றும் சில போதை பொருட்கள் சாலை மார்கமாக சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு வருவதையும் கண்டறிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பலரை கைது செய்துள்ளோம். மேலும் இங்குள்ள பலரும் டார்க் எனப்படும் செயலி மூலமாக போதைப் பொருட்களை வாங்குவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த செயலியில் பணம் கொடுத்து போதைப் பொருட்களை வாங்க முடியாது என்பதால் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்றவை மூலமாக போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பல வியாபாரங்கள் இந்த டார்க் செயலியில் நடக்கிறது. தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட செயலிகளையும் கண்காணித்து வருகின்றனர்.
விளைவு தெரியாமல் பல தவறான செயலிகளில் சென்று இளைஞர்கள் மாட்டிக் கொள்கின்றனர். மேலும் குறிப்பிட்ட இதுபோன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாங்கி அல்லது பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் காவல்துறையில் சிக்கிக் கொண்டால் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்பதை மறந்து இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என்ஜினியர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என படித்த பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் சிக்குபவர்கள் சாதாரண வழக்குகளைப்போல் வெளியே வந்து விட முடியாது. ஒவ்வொரு வழக்கிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். எனவே இளைஞர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தி விபரீத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
நேரடி தொடர்பு கிடையாது;
பெரும்பாலும் தற்போது டார்க் செயலி அல்லது போதைப் பொருட்கள் விற்பனைக்காகவே உருவாக்கப்பட்ட பல செயலிகளில் போதைப் பொருட்களை விற்பவர்களை நேரடியாக தொடர்புகொள்ள முடியாது. குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு போதை பொருட்கள வேண்டும் என நாம் கூறினால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வங்கி எண் அல்லது கூகுள் பே நம்பரை கொடுத்து பணம் போட சொல்வார்கள். நாம் பணம் போட்டதும் வேறு ஒருவர் மூலமாக அந்தப் பணம் மூன்றாவது நபருக்கு சென்றடையும். இதேபோன்று பொருட்களை தருபவர்களும் நேரடியாக கொண்டு வந்து கொடுக்காமல் குறிப்பிட்ட இடத்தில் பொருளை வைத்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து நமக்கு அனுப்புவார்கள். அதன்பிறகு அந்த இடத்திற்குச் சென்று நாம் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தான் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் போதை பொருட்கள் கைமாற்றப்பட்டு வருகின்றன.
பார்ட்டிக்கு முன்-பின்;
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெரும்பாலான ஓட்டல்களில் பார்ட்டி நடப்பது வழக்கம். பெரும்பாலும் இதில் கலந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் உள்ளே பார்ட்டிக்குச் சென்று மது அருந்துவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு இந்த மெத்தபெட்டமைனை எடுத்துக் கொள்கின்றனர். ₹3000க்கு வாங்கி குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேர் இந்த போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு பார்ட்டிக்குச் செல்கின்றனர். அதன் பிறகு அங்கு இரவு முழுவதும் ஜாலியாக இருந்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தூக்கம் வராமல் இரவு முழுவதும் போதையை அனுபவிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
எப்படி உள்ளே வருகிறது;
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை மாபியா கும்பல் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நைஜீரியன்ஸ் மூலமாக பெங்களூருக்கு அதிகளவில் போதை பொருட்கள் வருகின்றன. பெங்களூர் வழியாக சாலை மார்க்கமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. இதேபோல டெல்லி, குஜராத் வழியாகவும் தரை வழியாக போதை பொருட்கள் வருகின்றன. இவ்வாறு வரும்போது பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இலங்கை, ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் தாய்லாந்து, மலேசியாவில் இருந்து பர்மா பார்டர் முரே வழியாக தமிழகத்திற்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. சென்னைக்கு புறநகர் பகுதியான ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோன்று சென்னையின் மையப் பகுதியாக விளங்குகின்ற மண்ணடி, திருவல்லிக்கேணி போன்ற இடங்களிலும் சில நபர்கள் இந்த போதை பொருட்களுக்கு குருவியாக செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருங்கால சவால்;
தற்போது டார்க் வெப் போன்று பல வெப்சைட்டுகள் உலகம் முழுவதும் தொடங்கி, தங்களது சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றன. வருங்காலத்தில் இவர்களை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக கடந்த 10 வருடத்திற்கு முன்பு வரை காவல் நிலையங்களில் சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு பெரிய அளவில் செயல்படவில்லை. ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு இணையாக இந்த சைபர் கிரைம் செயல்பட்டு வருகிறது. தினமும் அவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று வருங்காலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தற்போது தொடங்கப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு விரிவுபடுத்தப்பட்டு தமிழக முழுவதும் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்தும் பொய்;
சமீபத்தில் மெத்தபெட்டமைன் பயன்பாடு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இரவு பணி செய்யும் ஐடி ஊழியர்கள் பெண்கள் உட்பட பலர் இந்த மெத்தபெட்டமைனை மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதாகவும், இதனால் இரவு முழுவதும் அவர்கள் தூக்கம் இல்லாமல் எனர்ஜியுடன் வேலை செய்ய முடிவதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, எப்பேர்பட்ட போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். அதிலும் நாம் சாதாரணமாக இருப்பதைவிட அதிகப்படியான சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் அனைத்து விஷயங்களுமே படிப்படியாக ஆபத்தை விளைவிக்கும் ஊக்க மருந்துகள் போதை வஸ்துக்கள் போன்றவை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தொடர்ந்து இது போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும்போது இந்த போதைப் பொருட்கள் இல்லாமல் நம்மால் பணி செய்ய முடியாது என்ற ஒரு நிலையை அது ஏற்படுத்திவிடும். எனவே படித்த இளைஞர்கள் இதிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டும் என்றனர்.
நுண்ணறிவு பிரிவின் செயல்பாடு;
சென்னையில் போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ரகசிய தகவலின் அடிப்படையில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து பலரையும் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 மாதத்தில் சென்னையில் மட்டும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் போதைப்பொருள் சம்பந்தமாக 450க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 400 கஞ்சா வழக்குகள், 45 போதை மாத்திரை வழக்குகள் மற்றும் 20 சிந்தடிக் ட்ரக் எனப்படும் போதைப் பொருட்கள் சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் மட்டும் மொத்தம் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா வழக்குகளில் மட்டும் 1010 பேரும், மாத்திரை வழக்கில் 140 பேரும், சிந்தடிக் போதைப் பொருட்கள் வழக்கில் 65 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 350 கிலோ கஞ்சா, 15,200 போதை மாத்திரைகள், 1.60 கிலோ மெத்தபெட்டமைன், 5 கிராம் கொக்கைன், ஏழு கிராம் அபின், 1100 எல்எஸ்டி ஸ்டாம்ப் மற்றும் 38 எம்டிஎம்ஏ டேப்லட் எனப்படும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் நெட்வொர்க் அமைத்து போதைப் பொருட்களை கடத்திய பல கும்பல்கள் வேரோடு கைது செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வெளியூர்களில் இருந்து போதை பொருட்களை சென்னைக்கு அனுப்பும் சில நெட்வொர்க்குகள் கண்காணிக்கப்பட்டு நேரம் வரும்போது அவர்களை தூக்க போலீசார் ஆயத்த பணியில் தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விலை;
போதைப் பொருட்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு போதை பொருட்களை கொண்டு சேர்க்கும்போது மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது. இதனால் இதனை பலரும் தொடர்ந்து வியாபாரமாக செய்கின்றனர். உதாரணத்திற்கு விசாகப்பட்டினத்தில் வாங்கப்படும் கஞ்சா சென்னையில் விற்கப்படும்போது ₹2000க்கு வாங்கி அதை ₹20 ஆயிரத்துக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் சென்னையில் ஒரு கிராம் மெத் ₹3000க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெங்களூருவில் ₹1200க்கு விற்கப்படுகிறது. இலங்கையில் ₹10,000 முதல் ₹15 ஆயிரம் வரை விறகப்படுகிறது. எந்தப் பகுதியில் விலை குறைவாக உள்ளதோ, அந்த பகுதியில் இருந்து வாங்கி அதை மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று சேர்ப்பதை ஒரு கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது.
The post சமூக வலைதளங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை; டார்க் வெப்சைட் மாய உலகில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்: போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஐடி ஊழியர்கள், இன்ஜினியர்கள் கைது appeared first on Dinakaran.