×
Saravana Stores

யானைகள், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் பொதுமக்கள் பார்வை நிறுத்தம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டு விட்டதாக அதன் இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். யானைகள் வழித்தடமாகவும், வனவிலங்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் உள்ள கோவை கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டி.மோகன் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கல்லாறு தோட்டக்கலை பண்ணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கல்லாறு அரசு தோட்டக்கலை துறையின் இயக்குனர் குமாரவேல் பாண்டியன், யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அதன் வழித்தடங்களில் செல்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையில், 21 ஏக்கர் பரப்பளவில் உள்ள கல்லாறு தோட்டக்கலை துறையின் நிலத்தில் ஆராய்ச்சி தவிர வேறு எந்த பணிகளும் நடத்தப் போவதில்லை. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சூரிய சக்தி மின்வேலிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் கோரும் பணிகள் நடந்து வருகிறது. யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளப்படும்.

சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதியுடன் பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பழங்கள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை முற்றிலுமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாத கழிப்பிட கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் எந்த கட்டுமானங்களும் தோட்டக்கலை பண்ணை இடத்தில் அமைக்கப்படாது.

விவசாயிகள், தோட்டக்கலை ஆராயச்சியாளர்கள், மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், கல்லாறு பகுதியில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இருக்க கூடாது என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே ஏன்?.

அதே போல் தோட்டகலை துறை பண்ணையில் காலியாக உள்ள 8 ஏக்கர் நிலத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லாறு தோட்டக்கலை துறை இயக்குனரின் அறிக்கை தெளிவாக இல்லை. நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் பரிந்துரையின் படி தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2ம் தேதி தள்ளிவைத்தனர்.

The post யானைகள், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் பொதுமக்கள் பார்வை நிறுத்தம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kallaru ,Tamil Nadu government ,Chennai High Court ,CHENNAI ,Kallar Horticulture Farm ,Coimbatore ,
× RELATED இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு...