×
Saravana Stores

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27 சதவீதம் டீசலுக்காக செலவிடப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு (எல்என்ஜி) பேருந்துகளை பரீட்சார்த்த முறையில் இயக்கிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர மற்ற 7 அரசு போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் இயற்கை எரிவாயு பயன்படுத்தி இன்ஜினில் மறுசீரமைப்பு செய்து மொத்தம் 14 பேருந்துகள் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் முதல்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாயு பேருந்துகள் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற போக்குவரத்து கழகங்களிலும் மக்கள் பயன்பாட்டிற்காக இயற்கை எரிவாயு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் தற்போது இயற்கை எரிவாவு பேருந்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி – சென்னை வழித்தடத்தில் இது இயக்கப்படுகிறது. பலகட்ட ஆய்வுகள் நடத்தி ஒரே ஒரு பேருந்தில் மட்டும் இன்ஜினை மறுசீரமைப்பு செய்து, கடந்த 12ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தினோம். தற்போது இந்த பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி – சென்னை – திருச்சி வழித்தடத்தில் ஒரு முழு பயணத்திற்கு சராசரியாக 660 கி.மீ. வரை இருக்கும். ஒரு முறை முழுமையாக எரிவாயு நிரப்பினால் இந்த வழித்தடத்தில் பயணத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியும். டீசல் பேருந்துகளுடன் ஒப்பிடும் போது கி.மீ.க்கு ரூ.5 வரை எரிவாயு பேருந்துகளில் சேமிக்க முடியும். பேருந்துகள் இயக்கத்தை ஒரு மாதம் முழுமையாக கண்காணித்தால் சேமிப்பின் அளவை சரியாக கணக்கிட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt Rapid Transport Corporation ,CHENNAI ,Tamil Nadu State Transport Corporation ,Government Rapid Transport Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக...