×
Saravana Stores

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது: பாஜவினருக்கு மேலிட இணை பொறுப்பாளர் கடிவாளம்

சென்னை: தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது. தொடர்ந்து மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், பாஜ தலைமையிலான ஒரு கூட்டணியும் தேர்தலை சந்தித்தது. இதில் 2 கூட்டணிகளும் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறப்போவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதில் அளித்தால், 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்” என்று அறிவித்தார். தொடர்ந்து இதையே அவர் வலியுறுத்தி வருகிறார். அதேநேரத்தில் டெல்லி மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பாஜவில் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்று பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜவினர் உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்தி, அமைப்பு தேர்தலை வெற்றிகரமாக நடத்தி கட்சியை வலுப்படுத்துவதே முதன்மையான கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை முன்னிலைப்படுத்தி, மோடியின் நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணிப் பிரச்னைகள், மாற்றுக் கட்சி உத்திகள் அல்லது தலைவர் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். மாநில தலைமையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர்கள் மட்டுமே முக்கியமான விஷயங்களில் கருத்து தெரிவிக்க வேண்டும். தமிழக பாஜவின் கூட்டணி குறித்து இப்போது கருத்து சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அது தேவையற்றது. தேர்தல் நேரத்தில் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது: பாஜவினருக்கு மேலிட இணை பொறுப்பாளர் கடிவாளம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Kadivalam ,CHENNAI ,AIADMK ,Dinakaran ,
× RELATED பாஜ மாநில நிர்வாகி அலிஷா...