ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எ.எம்.சவுத்ரி முதற்கட்டமாக நேற்று 10 மணி நேரம் ஆய்வு செய்தார். இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. பாலத்தில் ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் வழங்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் இறுதிக்கட்ட ஆய்வு நேற்று துவங்கியது. பாதுகாப்பு ஆணையர் எ.எம்.சவுத்ரி நேற்று காலை 8 மணிக்கு அக்காள்மடம் லெவல் கிராசிங் நிறுத்தத்தில் இருந்து ஆய்வை துவங்கினார்.
அங்கிருந்து டிராலி மூலம் பாம்பன் ரயில் நிலையம் அருகே சின்னப்பாலம் ரயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பிற்பகல் 3 மணியளவில் தூக்குப்பாலத்தில் இருந்து மண்டபம் நோக்கி உள்ள ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். பாம்பன் – மண்டபம் இடையே சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. இன்று (நவ. 14) 2ம் நாள் ஆய்வில் புதிய ரயில் பாலத்தில் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறும்.
The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 10 மணி நேரம் ஆணையர் ஆய்வு: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.