சென்னை: 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை (14.11.2024) முதல் (20.11.2024) வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகள், நோக்கம், செயல்படுத்தப்படும் திட்டங்கள் அதன் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கூட்டுறவில் அனைவரும் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்ற வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அனைத்திந்திய கூட்டுறவு வார விழா” இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களும், வங்கிளும் மிக நீண்ட வரலாற்றையும், சிறந்த பராம்பரியத்தையும் கொண்டதாகத் திகழ்கிறது. அதன்படி, கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை (14.11.2024) தொடங்கி வருகின்ற 20.11.2024 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த 2024 ஆண்டு கூட்டுறவு வாரவிழா ”தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு” என்ற முதன்மை மையக் கருப்பொருளின் அடிப்படையில் 14.11.2024 முதல் 20.11.2024 வரை (1.கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய முன்னெடுப்புகள் மூலம் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துதல், 2.கூட்டுறவுகளில் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நிர்வாகம், 3.தொழில் முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதில் கூட்டுறவுகளின் பங்கு, 4.கூட்டுறவு நிறுவனங்களை உறுமாற்றுதல், 5.கூட்டுறவுகளுக்கு இடையே கூட்டுறவை வலுப்படுத்துதல்,
6.பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான கூட்டுறவுகள், 7.நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும், மேம்பட்ட உலகை உருவாக்குவதிலும் கூட்டுறவுகளின் பங்கு) – என ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் இந்த 71ஆவது கூட்டுறவு வாரவிழா இவ்வாண்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024 துவக்க நாளன நாளை (14.11.2024) காலை 10 மணியளவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைக்கவுள்ளார். அதேபோல, சென்னை கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர். ந. சுப்பையன் இ.ஆ.ப., அவர்கள் கொடி ஏற்ற உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் கூட்டுறவுக் கொடி ஏற்றப்பட்டு விழா கொண்டடப்படவுள்ளது. அதுசமயம் கூட்டுறவு வார விழா உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேற்கூறிய கூட்டுறவு வார விழா கருப்பொருளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள், கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம்கள், இரத்த தான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
The post அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது appeared first on Dinakaran.