×
Saravana Stores

நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்தார் துணை முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதலமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இன்று (13.11.2024) சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி நேரில் பார்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதலமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் தெரிவித்தார்.

பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; “இன்றைக்கு நமது கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகின்ற டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்ற மருத்துவரை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து தற்போது தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் அவர்களை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்றும் தெரிகின்றது. இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் அவர்களை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது மருத்துவர் பாலாஜி stable-ஆக இருக்கின்றார். இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் சுயநினைவுக்கு வந்துவிடுவார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல்துறையினாரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் அனைவர் மீதும் அக்கறை கொண்டது முதலமைச்சர் அவர்களின் அரசு. அவர்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பினை கண்டிப்பாக, உறுதியாக வழங்கவேண்டும் என்று நமது முதலமைச்சர் தெளிவாக இருக்கின்றார். கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: தற்போது மருத்துவர் எப்படி இருக்கிறார்?
துணை முதலமைச்சர் அவர்களின் பதில் : தலைப்பகுதியில் நான்கு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ஏற்பட்ட காயம், இடது கழுத்துப் பகுதிகளில் ஒரு காயம், இடது தோள்பட்டையில் ஒரு காயம், இடது காதுமடலில் ஏற்பட்ட ஒரு காயம். இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் எல்லாம் உடன் இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தார்கள் வந்திருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறோம். அவருடைய தாயார், மனைவி (டாக்டர்) ஆகியோர் உடன் உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்.

கேள்வி: 6 மாதமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். அவருடைய தாயாருக்கு எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது?
துணை முதலமைச்சர் அவர்களின் பதில் : சரியான முறையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த மருத்துவர் சொன்னதை வைத்து, காலையில் கூட இங்கு மருத்துவரிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார், உடன் நர்ஸ் இருந்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு தவறான முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு சிறந்த மருத்துவர். (தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்) முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின்பேரில், நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து மருத்துவ சங்கங்களுடன் மாலை 3 மணி அளவில் கூட்டம் நடத்தயிருக்கிறார். அனேகமாக மருத்துவ சங்கங்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில், இதுமாதிரி ஒரு சம்பவம் மருத்துவமனையில் நடந்திருக்கிறது. இதன் பாதுகாப்பு எப்படி என்பது குறித்து……
துணை முதலமைச்சர் அவர்களின் பதில் : நீங்களே சொல்கிறீர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள் என்று. இங்கே அந்த இளைஞர் விக்னேஷ் தொடர்ந்து 6 மாத காலமாக இந்த மருத்துவமனைக்கு அவருடைய தாயாரை அழைத்து வந்திருக்கிறார். அதனால், அவர் மீது எந்தவிதமான சந்தேகமோ வரவில்லை. அந்த மருத்துவருக்குக்கூட எந்தவித சந்தேகமோ, பயமோ வரவில்லை. தொடர்ந்து வந்து சிகிச்சைப் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து மருத்துவரிடம் தொடர்பில் இருந்திருக்கிறார். அதுவும் அரை மணி நேரம் மருத்துவரிடம் பேசிக் கொண்டும் இருந்திருக்கிறார். அதனால் இது தவிர்க்கமுடியாத சம்பவம். இனிமேல், இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கேள்வி: மருத்துவனையில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ச்சியாக அவர் சொல்வது உண்மை இருக்கிறது என்று மேற்கோள் காட்டுகிறார். இது பற்றி….
துணை முதலமைச்சர் அவர்களின் பதில் : இது தவிர்க்க முடியாத ஒன்று. இனிமேல் நடக்காமல் தடுப்போம். நான் ஏற்கனவே சொன்னதுபோல, விக்னேஷ் 6 மாதமாக அவரது தாயாரை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார். இதே மருத்துவமனையில் அவரது தாயாருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த மருத்துவரிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். தனியார் மருத்துவமனைக்குச் சென்று அந்த மருத்துவர் சொன்னதை கேட்டு இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஏதோ கோபத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

கேள்வி : வேறு ஏதாவது காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா? வேறு நோயாளிகள் இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?
துணை முதலமைச்சர் அவர்களின் பதில்: விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அதுபோல எதுவும் இல்லை. மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். முதல் priority மருத்துவர் பாலாஜி அவர்களுக்கு சரியான சிகிச்சை அளித்து அவரை மீட்டெடுப்பதுதான் முதல் priority. அனைத்து மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை இந்த அரசு வழங்கும்” என தெரிவித்தார்.

The post நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்தார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Chief Minister ,Balaji ,Chennai ,Deputy Chief Minister ,Tamil Nadu ,Assistant Chief Minister ,Adyanidhi Stalin ,Kindi Kindi High Specialty Hospital ,Government ,Doctor ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...