×

பாரில் பெட்ரோல் குண்டு வீச்சு

அண்ணாநகர்: அரும்பாக்கம் 100 அடி பிரதான சாலையில் டாஸ்மாக் பார் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த வாலிபர், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, பார் வாசலிலேயே படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த பார் ஊழியர்கள், அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பார் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து, கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை பார் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

அப்போது, பெட்ரோல் குண்டு வெடித்து, அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அங்கிருந்த குடிமகன்கள் அலறியடித்து ஓடினர். உடனே பார் ஊழியர்கள், தீயை அணைத்தனர். பின்னர், இதுபற்றி அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், திருமுல்லைவாயல் சக்திவேல் நகரை சேர்ந்த விஷ்ணு (30) என தெரிய வந்தது. இவர் மது போதைக்கு அடிமையானவர் கடந்த இரு ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

The post பாரில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Petrol bomb attack ,Annanagar ,Arumbakkam ,Tasmac bar ,Dinakaran ,
× RELATED குடியிருப்புவாசிகளிடம் தகராறு...