அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு பகுதி, 3வது தெருவில், அடையாறு ஆனந்த பவனின் உணவு கூடம் உள்ளது. இங்குள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் இனிப்பு வகைகளும், 2வது தளத்தில் கார வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் இனிப்பு, கார வகைகள் பேக்கிங் செய்யப்படுகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால், நேற்று உணவுக்கூடம் இயங்கவில்லை. இருப்பினும், அலுவலக பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று பணியில் இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில், கார வகைகள் தயாரிக்கப்படும் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.
இதை பார்த்த ஊழியர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் முதல் தளத்திற்கும் தீ பரவியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயலில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் போராடி, மாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர். இதனிடையே, அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர், மண்டல அதிகாரிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ஆகியோர் தொழிற்சாலையை பார்வையிட்டனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில், இயந்திரங்கள், உபகரணங்கள் கருகின. விடுமுறை நாள் என்பதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
The post பிரபல ஓட்டல் உணவு கூடத்தில் தீவிபத்து: இயந்திரங்கள், உபகரணங்கள் கருகின appeared first on Dinakaran.