புதுடெல்லி: டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தடையை மீறி பலரும் பட்டாசு வெடித்ததால் கடும் காற்று மாசு ஏற்பட்டது. இந்நிலையில், தடை உத்தரவை முறையாக அமல்படுத்தாத டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிபதி நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பட்டாசு தடை உத்தரவை அமல்படுத்துவதை டெல்லி போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் பார்க்கிறோம். பட்டாசு உற்பத்தி செய்யவும், சேமிக்கவும், விற்கவும் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டதாக பிரமாண பத்திரத்தில் எந்த தகவலும் இடம் பெறவில்லை. அக்டோபர் 14ம் தேதி வரை தடை உத்தரவை பிறப்பிக்க டெல்லி அரசு ஏன் தாமதம் செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த தாமதம் தான் பலரும் பட்டாசுகளை வாங்க வழிவகுத்துள்ளது.
எனவே, டெல்லியில் பட்டாசு தடையை ஆண்டுமுழுவதும் நீட்டிப்பது குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, 15 நாளில் டெல்லி அரசு முடிவெடுத்து வரும் 25ம் தேதி பதிலளிக்க வேண்டும். மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. எந்த மதமும் மாசுபாட்டை உருவாக்கும் எந்தச் செயலையும் ஊக்குவிப்பதில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பது மக்களின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை உரிமையையும் பாதிக்கும் என்றனர்.
The post டெல்லியில் பட்டாசு தடை வழக்கு மாசு ஏற்படுத்தும் செயலை எந்த மதமும் ஊக்குவிக்காது: உச்ச நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.