×
Saravana Stores

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 34 இடங்களை வீணாக்கிய மாணவர்கள்: அடுத்த ஓராண்டு வரை மருத்துவப்படிப்பில் சேர தடை

சென்னை: நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 6 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இடங்களை வீணாக்கியவர்களுக்கு அடுத்த ஓராண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் இருந்தன. அதன்படி, நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வந்தது.

சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆக.22ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்களில் சிலர் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனர். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகி உள்ளன.

இதேபோன்று, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது. இதனால், நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவர்களில் எம்பிபிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பிடிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாணவர்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவர்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.

The post எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 34 இடங்களை வீணாக்கிய மாணவர்கள்: அடுத்த ஓராண்டு வரை மருத்துவப்படிப்பில் சேர தடை appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான...