×
Saravana Stores

சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்டது

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 10 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம், 172 பேருடன் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் செல்லும்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்னை ஏற்பட்டு ஏசி இயங்காததால், பயணிகள் வெப்பம் மற்றும் புழுக்கத்தில் தவித்தனர். இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால், பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை, சென்னை விமான நிலைய ஓடுபாதையில் நிறுத்திவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். பின்னர் பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பழுதை சரி செய்தனர். பழுது சரிபார்ப்புக்கு பிறகு மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளை சமாதானம் செய்த, ஏர் இந்தியா விமான அதிகாரிகள், பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்தனர்.

ஆனால் மாலை 5 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால், இரவு 8 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே பயணிகள் பலர் தங்களுடைய பயணிகள் டிக்கெட்களை, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் வேறு விமானங்களுக்கு மாற்றிவிட்டு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து, 40 பயணிகள் மட்டும், இரவு 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்தனர்.

காலை 10 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 10 மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 172 பேரும் தப்பினர். இச்சம்பவம் குறித்து, டெல்லியில் உள்ள டி.ஜி.சி.ஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

* காலை 10 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 10 மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.

The post சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Delhi ,Air India ,Chennai Domestic Airport ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின்...