×
Saravana Stores

இரண்டாவது சீசன் நிறைவு எதிரொலி தாவரவியல் பூங்கா மலர் அலங்காரங்கள் அகற்றம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் வாடிய நிலையில், அவைகளை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதால் மலர் அலங்காரங்களை காண நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாள் தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இதனால், இந்த 2 மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்படுகிறது. மேலும், மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதேபோல், ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இந்த 2 மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.

இவ்விரு மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பெரிய அளவிலான விழாக்கள், கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவதில்லை. எனினும், தாவரவியல் பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், பல ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இம்முறையும் இரண்டாம் சீசனை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்பட்டன. இதனை கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 15 ஆயிரம் தொட்டிகளில் மாடங்களிலும், 3 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பெர்னஸ் புல் மைதானத்திலும் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதியுடன் இரண்டாவது சீசன் முடிந்தது. எனினும், தீபாவளி பண்டிகை மற்றும் வார விடமுறை என தொடர் விடுமுறை வந்ததால், மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான செடிகளில் உள்ள மலர்கள் வாடிய நிலையில், இவைகளை அகற்றிவிட்டு முதல் சீசனுக்காக தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்படவுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் பெர்ன் புல் மைதானத்திற்குள் சென்றால், தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், நேற்று முதல் மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post இரண்டாவது சீசன் நிறைவு எதிரொலி தாவரவியல் பூங்கா மலர் அலங்காரங்கள் அகற்றம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Botanical Garden ,Nilgiris ,Botanical ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடிகார...