×

டாக்ஸியில் குட்கா கடத்திய ஓட்டுனர் கைது

சூலூர், நவ.8: சூலூர் அருகே தனியார் டாக்ஸியில் குட்கா கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த டாக்ஸி ஓட்டுனரை ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்து ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கோவை சூலூர் முத்துகவுண்டன்புதூர் முதலிபாளையம் பிரிவில் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான கால் டாக்ஸி ஒன்று சென்றுள்ளது. சந்தேகத்துக்கு இடமாக சென்ற அந்த காரை துரத்தி நிறுத்திய போலீசார் அந்தக் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் காரை ஓட்டி வந்த நபரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அந்த நபர் திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டியை சேர்ந்த ரமேஷ்பாண்டி என்பது தெரியவந்தது. இவர் பகல் நேரங்களில் கால் டாக்ஸி ஓட்டுனராகவும் இரவு நேரங்களில் குட்கா கடத்தி வந்து கோவையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கர்நாடகா மாநிலத்திலிருந்து இந்த குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 365 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த சூலூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டாக்ஸியில் குட்கா கடத்திய ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Sulur ,Coimbatore ,Sullur ,Muthukoundanputur ,Mudalipalayam ,Dinakaran ,
× RELATED கோவை சூலூரில் குறைந்த வட்டிக்கு கடன்...