- விருதுநகர் மாவட்டம்
- திமுக
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
சென்னை: மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர் 5, 6 இரண்டு நாட்களிலும் கோவை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.
வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது. கோவையில் எல்காட் நிறுவனத்தின் சார்பிலான புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அந்தத் துறையின் அமைச்சரும் பன்னாட்டு அளவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிந்தவருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் பங்கேற்றேன்.
டைடல் பூங்காவை அமைத்திடத் துணை நின்றவர் பொதுப்பணித் துறை அமைச்சரான எ.வ.வேலு. நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருடன் வேலுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கோரிக்கை வைத்த மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் வகையிலான இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது.
தங்களுக்குரிய நிலத்தை விற்கவும் வாங்கவும் முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை. அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமியும் பங்கேற்றார். காலை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மாலையில் தங்க நகை உற்பத்தியாளர்கள் பணி செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பட்டறைகளைப் பார்வையிட்டேன்.
இதைத்தொடர்ந்து, இந்த ஆட்சி அமைவதற்கு அயராத உழைப்பைத் தந்த திமுகவினை சந்தித்து அவர்களுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி நவம்பர் 6 அன்று மாலையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 10 தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாகிகளுடனான கலந்தாய்வினை நடத்தினேன். திமுகவின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே கோவைக்குச் சென்று கழகத்தினருடனான கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்திருந்தார்.
கோவை மாவட்டத்தைக் கழகத்தின் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டத்தின் இரண்டு நாள் நிகழ்வுகளையும் முன்னின்று ஏற்பாடு செய்திருந்த விதம், எடுத்துக்கொண்ட அக்கறை, செயலாற்றலில் வெளிப்பட்ட துல்லியம் இவை அனைத்தும் நமக்கு எந்தளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே அளவுக்கு அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் தருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன்.
மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம். நவம்பர் 6ம் நாள் அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோவையில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
* 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன்.
The post 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.