×
Saravana Stores

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளுக்கு ரூ6,000-15,000 வரைதான் ஓய்வூதியம் வழங்குவதா?.. உச்சநீதிமன்றம் அதிர்ச்சி


புதுடெல்லி: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளுக்கு ரூ6000 முதல் ரூ15 ஆயிரம் வரை தான் ஓய்வூதியம் வழங்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி, தனது ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்,’ உத்தரபிரதேச மாநிலத்தில் 13 ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி விட்டு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி நான் ஓய்வு பெற்றேன். எனக்கு மிகவும் குறைந்த அளவில் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதை சரிசெய்யும்படி மனு செய்தும் அதிகாரிகள் பரிசீலிக்க மறுத்துவிட்டார்கள்.

மாவட்ட நீதித்துறையில் இருந்து உயர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வூதியப் பலன்கள், உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். ஆனால் எனக்கு அவ்வாறு கணக்கிடப்படவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை மிகக் குறைந்த ஓய்வூதியம் கிடைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது.

நீதிபதிகள் கூறுகையில்,’ ஓய்வூதியம் பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6,000 முதல் 15,000 ரூபாய் வரை தான் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்றால், அது அதிர்ச்சியளிக்கிறது. அது எப்படி முடியும்?. ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகளுக்கான ஓய்வுக்குப் பிந்தைய வசதிகள் வேறுபட்டதாக உள்ளன. சில மாநிலங்கள் சிறந்த பலன்களை வழங்குகிறது. இதை சரிசெய்ய வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளுக்கு ரூ6,000-15,000 வரைதான் ஓய்வூதியம் வழங்குவதா?.. உச்சநீதிமன்றம் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,High Court ,New Delhi ,Allahabad High Court of Uttar Pradesh ,
× RELATED அடிப்படை உரிமைக்கு பாதிப்பு; ஜாமீன்...