புரி: ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, ரயில் தண்டாவாளத்தில் காஸ் சிலிண்டர், பாறாங்கல் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற செயல்களில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி ஆனந்த் விஹார்- ஒடிசாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில், ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அடுத்த 5 நிமிஷங்களில் பவுத்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினர். இதனால் துப்பாக்கி குண்டுகள் சில, ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்திய கும்பல், அங்கிருந்து தப்பியோடிவிட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் மேற்கண்ட ரயில் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கல்வீச்சு, காஸ் சிலிண்டர், பாறாங்கல்லை தொடர்ந்து ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச் சூடு; அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.