சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 160 மிமீ மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வாரம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியபோதே காற்றழுத்தம் உருவாகி அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சுமார் 1 வாரம் வரையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்துக்கென புயல் ஏதும் இதுவரை உருவாகவில்லை. இந்நிலையில், பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது.
அதன் காரணமாக நேற்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. அதிகபட்சமாக நேற்று கொட்டாரத்தில் 160மிமீ மழை பெய்தது. திருவொற்றியூர், உத்திரமேரூர் 30 மிமீ, தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, கொளத்தூர், நுங்கம்பாக்கம், திருப்போரூர் 20 மிமீ ,கோடம்பாக்கம் ஐஸ் ஹவுஸ், எம்ஜிஆர் நகர், பெரம்பூர், வானகரம், மணலி, திரு.வி.க.நகர் 10மிமீ மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் கரூர் பரமத்தியில் 90 டிகிரி வெயில் இருந்தது.
பிற மாவட்டங்களில் 90 டிகிரி மற்றும் அதை ஒட்டியே வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று தொடங்கி 9ம் தேதி வரையில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரியை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 5ம் தேதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், 6ம் தேதியில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், 7ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை பெய்யும் appeared first on Dinakaran.