சென்னை: தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்புவதற்காக அரசு பேருந்துகளில் பயணம் செய்ய நேற்று ஒரே நாளில் 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், விமானம், சொந்த வாகனங்கள் மூலம் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தமிழக போக்குவரத்து துறை சார்பில் கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்களில் இயக்கப்பட்ட 10,784 சிறப்பு பேருந்துகளில் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சனிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் இன்று வேலைநாள் என்பதால் பலரும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் சென்னைக்கு திரும்ப பயணம் மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,735 சிறப்பு பேருந்துகள் என 3,827 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து 1,540 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசின் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்தது.
கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் அதற்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்து முன்பதிவில் இதுவரை இல்லாத அளவாக புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இது மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் என்றும் மேலும் வரும் நாட்களில் இது 75 சதவீதத்தையும் தாண்டும் என நம்புவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post ஒரே நாளில் 75,000 பேர் முன்பதிவு: அரசு பேருந்து முன்பதிவில் புதிய சாதனை, போக்குவரத்துதுறை தகவல் appeared first on Dinakaran.