×
Saravana Stores

அனைத்து மாவட்டங்களிலும் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வை கோவையில் நாளை தொடங்குகிறார்

கோவை: அனைத்து மாவட்டங்களிலும் அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நாளை கள ஆய்வு தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

அந்த வகையில் நாளை (5ம் தேதி) கோவை மாவட்டத்தில் இருந்து முதல்வர் தனது கள ஆய்வை துவங்குகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், விளாங்குறிச்சியில் உள்ள ஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து மாலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர், அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 6ம் தேதி காலை கோவை மத்திய சிறை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பேசுகிறார். மதியம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கோவையில் முதல்வர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். மூன்றாவது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கணபதி ராஜ்குமார் எம்.பி., துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post அனைத்து மாவட்டங்களிலும் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வை கோவையில் நாளை தொடங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Coimbatore ,M. K. Stalin ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அலுவலகங்களுக்கு வெளியே இருந்து...