சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதிமுகவில் நிர்வாகிகள் சிலரை மாற்றுவது குறித்து விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிமுக மீண்டும் அதிக வாக்குகளை பெற வேண்டும் என்றால் கட்சியை ஒருங்கிணைப்பது ஒன்றுதான் தீர்வு என்று எடப்பாடியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை குறித்து ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த எடப்பாடி தீர்மானித்துள்ளார். அதன்படி வருகிற 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 6ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த, மாநில கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.